×

அதிமுக ஆட்சியில் ஊராட்சி நிதியில் பல லட்சம் மோசடி பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அதிமுக ஆட்சியில், ஊராட்சி நிதியில் பல லட்சம் மோசடி சம்பவம் குறித்து பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் அரியலூர் ஊராட்சியில், கடந்த அதிமுக ஆட்சியின் போது தணிக்கை குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊராட்சியில் குடிநீர் திட்டங்கள், மின்விளக்கு பராமரிப்பு, மோட்டார் பழுது பார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் ரூ.60 லட்சம் செலவு செய்ததாகவும், ஆனால் அதற்கான பில் ஏதும் வைக்காமல் ஊராட்சி நிதியை மோசடி செய்ததாகவும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அப்போது பஞ்சாயத்து கிளார்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து இது குறித்து விழுப்புரம் எஸ்பியிடம் தலைவர், துணை தலைவர் மற்றும் கிளார்க் ஆகியோர் மீது மோசடி புகார் கூறப்பட்டிருந்தது. இதனிடையே ஊராட்சி மன்ற தலைவர் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து இந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் பஞ்சாயத்தில் நடந்த ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று கோலியனூர் பிடிஓ ஜானகிக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. இது அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுக ஆட்சியில் ஊராட்சி நிதியில் பல லட்சம் மோசடி பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை: விழுப்புரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : PTO ,AIADMK ,Villupuram ,
× RELATED கொல்லிமலை பிடிஓ பொறுப்பேற்பு