×

சிங்காடிவாக்கம் ஊராட்சியில் குட்டையில் செத்து மிதக்கும் மீன்கள்: உடனடியாக அகற்ற கோரிக்கை

வாலாஜாபாத்: சிங்காடிவாக்கம் ஊராட்சியில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் குட்டையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனை, உடனடியாக அகற்றி குட்டையை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சிங்காடிவாக்கம் ஊராட்சியில் உள்ள மேட்டு தெருவில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டை கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீருக்காக பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த குட்டை முறையாக பராமரிப்பு இல்லாததால், குட்டை முழுவதும் புதர்கள் மண்டி கால்நடைகளுக்கு பயன்படாத நிலையில் காணப்படுகிறது. அவ்வப்பொழுது பேரிடர் காலங்களில் பெய்யும் மழைநீர் தேங்கி, அதில் மீன்கள் வளர்ந்து வந்த நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வெப்பத்தன்மையால் மீன்கள் இறப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், இறந்த மீன்கள் அப்புறப்படுத்தாத நிலையில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் சூழலும் இப்பகுதியில் நிலவுகின்றன.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் கூறுகையில், ‘சிங்காடிவாக்கம் ஊராட்சியில் உள்ள குட்டை முறையாக பராமரிப்பு இல்லாததால், இக்குட்டையில் இருந்த மீன்கள் இறந்துள்ளது. இந்த இறந்த மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். மேலும், இக்குட்டையில் இறந்து கிடக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தியும், இதிலுள்ள நீரை வெளியேற்றி மீண்டும் இந்த குட்டையை ஆழப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post சிங்காடிவாக்கம் ஊராட்சியில் குட்டையில் செத்து மிதக்கும் மீன்கள்: உடனடியாக அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sinkativanakam Kuraduchi ,Dinakaran ,
× RELATED அனைவருக்கும் பொருளாதாரம் சீராக பரிகாரம்