×

மாதவரம் மேம்பாலம் அருகே தொடரும் நெரிசல்; ரவுண்டானாவில் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருவெற்றியூர்: மாதவரம் மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசல் தொடர்வதால், ரவுண்டானாவில் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மேம்பாலம் ரவுண்டானா சந்திப்பில் மூலக்கடை, கொசப்பூர், புழல், ரெட்டேரி ஆகிய 4 புறங்களில் இருந்தும் தனியார் மற்றும் மாநகரப் பேருந்து, லாரி, கார், பைக் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இவ்வாறு அதிகப்படியான வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய இந்த ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் செல்ல போதிய இடவசதி இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த வாகன நெரிசலை சீரமைக்க தினம்தோறும் போக்குவரத்து போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. இதனால் அவசரத்திற்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ரவுண்டானாவில் போக்குவரத்து பாதைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘மூலக்கடையில் இருந்து புழலுக்குச் சென்று வரக்கூடிய பாதையை வளைந்து செல்லாமல் நேராக செல்லும் வகையில் மேம்பாலத்திற்கு அடியில் இருக்கக்கூடிய ரவுண்டானாவை மாற்றி அமைத்தால் வாகனங்கள் தடையில்லாமல் அந்தந்த வழியில் செல்வதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.

அதுமட்டுமின்றி அலுவலக நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டால் பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,’’ என்றனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வாகன நெரிசல்களை குறைக்கும் வகையில் ரவுண்டானாவில் போக்குவரத்து பாதையில் மாற்றங்கள் செய்து அதற்கான வரைபடத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை அது செயல்பாட்டுக்கு வரவில்லை,’’ என்றனர்.

வாகன நிறுத்த பகுதியை இடம் மாற்ற வேண்டும்: மாதவரம் மேம்பாலம் அருகே சிஎம்டிஏக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் லாரி நிறுத்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான லாரிகள் வந்து செல்வதால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சிஎம்டிஏ வாகன நிறுத்த மையத்தை போக்குவரத்து அதிகமாக இல்லாத இடத்திற்கு மாற்றினால் இந்த பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

சாலையில் கழிவுநீர் தேக்கம்: மாதவரம் மேம்பாலம் அருகே மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும்போது கழிவுநீர் குழாயை உடைத்து விட்டனர். இதனால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்கி குளம் போல் போல் நிற்கிறது. தற்காலிகமாக அந்த அடைப்பை சரி செய்துள்ளனர். ஆனாலும் மழைநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், கால்வாயில் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல், அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

The post மாதவரம் மேம்பாலம் அருகே தொடரும் நெரிசல்; ரவுண்டானாவில் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mathavaram ,Roundana ,Thiruvetruthyur ,Mathavaram Pavalam ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...