×

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம்: மல்யுத்த வீரர்கள், போலீசார் கடும் மோதல்; தடியடியால் பரபரப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். பாஜக எம்பியான இவர் மீது, பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் விளக்கம் கேட்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரிக்க பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, விசாரணை அறிக்கை தாக்கல் செய்தபோதும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினர். கடந்த 23ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில்தான், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அதேபோல் பிற கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆம்ஆத்மி கட்சியின் மால்வியா நகர் எம்எல்ஏ சோம்நாத் பாரதி அனுமதியின்றி போராட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றார். அப்போது போராட்டக்காரர்களுக்கு மடிக்கும் வகையிலான பெட் வழங்க சென்றார். இதையடுத்து சோம்நாத் பாரதி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வேளையில் போலீசார், மல்யுத்த வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மடிக்கும் வகையிலான பெட்களை மல்யுத்த வீரர்களிடம் இருந்து போலீசார் பறித்தனர். இதனால் அங்கு மோதல் உருவானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி மல்யுத்த வீரர்கள் கூறுகையில், போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர். குடிபோதையில் டெல்லி போலீஸ் சீருடையில் வந்த சிலர் தங்களை தாக்கியதாகவும், குறிப்பாக எங்களை அடித்து துன்புறுத்தியதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வன்முறையில் 2 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே போலீசார் மற்றும் மல்யுத்த வீரர்கள் இடையே நடந்த கைக்கலப்பு தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம்: மல்யுத்த வீரர்கள், போலீசார் கடும் மோதல்; தடியடியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi Jandar ,New Delhi ,President ,Indian Wrestling Commission ,Baja ,Brij Bushan ,Saran Singh ,Delhi ,Jandar Manthar ,
× RELATED மாணவர்களின் கனவுகளை சிதைத்து...