சென்னை: திராவிட மாடலை கொச்சைப்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்கள் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டி 04.05.2023 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது. இப்பேட்டியின் மூலம் ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்கள் தன்னை மீண்டும் ஒரு ஆர்எஸ்எஸ் – பிஜேபியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துக் கொண்டு அப்படி இல்லை என்று பொய். தமிழ்நாடு நிதியமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாமல் ஆர்எஸ்எஸ்-ஐச் சார்ந்த என்.ஜி.ஓ. அமைப்பை நியாயப்படுத்துகின்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தமிழ்நாடு அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்துள்ளார். ஆர்எஸ்எஸ் – பிஜேபி முன்வைக்கும் ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்தை ஆதரிப்பதன் மூலமும், மதச்சார்பின்னை பற்றி அரசியல் நிர்ணய சபையில் பேசவில்லை என்று கூறுவதன் மூலமும், திராவிட மாடலை கொச்சைப்படுத்துவதன் மூலமும் ஆளுனர் ஆர்.என்.ரவி ஒரு ஆர்எஸ்எஸ் – பிஜேபி உறுப்பினராகவே வெளிபடுத்தியுள்ளார். இப்படி ஒரு பேட்டியை அளித்ததன் மூலம் ஒரு ஆளுனர் என்ற முறையில் தன் அரசியல் அமைப்புக் கடமையிலிருந்து தவறிவிட்டார். எனவே, தமிழ்நாடு ஆளுனரை வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக அவர் பதவி விலக வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.
The post திராவிட மாடலை கொச்சைப்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

