×

மதுரை சித்திரை திருவிழாவில் ஆற்றில் இறங்கும் அழகர் அணிவதற்காக ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைப்பு

திருவில்லிபுத்தூர் : மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போது அணிவதற்காக, ஆண்டாள் சூடிய மாலை திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும்போது, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் சூடிய மாலை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டாளுக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது.

இதன்பிறகு சிறப்பு பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன.இதையடுத்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, வஸ்திரம் ஆகியவை கூடை ஒன்றில் வைக்கப்பட்டது. பின்னர் கோயிலை சுற்றி நான்கு வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க மாலை கொண்டுவரப்பட்டு மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆண்டாள் சூடிய மாலை மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்வை காண்பதற்காக திருவில்லிபுத்தூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வருகை வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜையில் விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ணஜெயஆனந்த், ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் பணியாளர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

The post மதுரை சித்திரை திருவிழாவில் ஆற்றில் இறங்கும் அழகர் அணிவதற்காக ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Andal ,Madurai Shitrisha festival ,Thiruvillyputtur ,Thiruvilliputtur ,Beadhagar river ,Madurai Sitra festival ,Madurai Shiru festival ,Dinakaran ,
× RELATED பாஜ நிர்வாகிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்