×

சென்னை கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்வது தொடர்பாகவும் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் செயல்படுத்தும் வகையில், இன்று (4.5.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் அவர்களுடைய கோரிக்கைகள் கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பணிகள் 3 மாதத்திற்குள் தொடங்கப்படும். அதேபோன்று, சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராட்வே, பி.ஆர்.என். கார்டனில் அமைந்துள்ள 146 குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 86 குடியிருப்புகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பி.ஆர்.என். கார்டன் பகுதியில் அமைந்திருக்கின்ற பழுதடைந்த நிலையில் இருக்கும் இக்குடியிருப்பில் வசிக்கின்ற மக்களின் பாதுகாப்புக் கருதி, இக்குடியிருப்பு மக்களை வேறு பகுதிக்கு மாற்றம் செய்து, அப்பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகள் கட்டியமைத்து ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கின்ற வடசென்னை பகுதியின் மேம்பாட்டு பணிக்கு ரூ.1000 கோடி, மூன்றாண்டுகளில் செலவிடப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க இதுபோன்ற இதுவரையில் யாரும் பாராமுகமாக இருந்த உழைக்கின்ற தொழிலாளர்களுடைய உயிர்மூச்சாக இது போன்ற பணிகளை உடல் ஆராக்கியத்தை பேணுகின்ற சமுதாய சீரழவிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்குண்டான விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவது போன்ற அதிமுக்கிய பணிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் பயன்பெறுகின்ற வகையில் பணிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து இந்த திட்டங்களை எடுத்து செயல்படுத்துவது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றது. இதுபோன்ற பணிகள் தொடரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

The post சென்னை கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.! appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Chennai Kanikapuram playground ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Tamil Nadu ,Chennai Metropolitan Development ,Dinakaran ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்...