×

ஆயிங்குடி கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

புதுக்கோட்டை, மே 4: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் நீர் நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராம எல்லையில் ஆரம்பமாகி 2,500 மீட்டர் நீளமுடன் மாத்தூர் எரியில் முடிவடைகிறது. இதன்மூலம் 88.02 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும்.

மேற்கண்ட வடிகால் வாய்க்கால் மிகவும் தூர்ந்தும், பக்க சரிவுகளில் மண் மேடிட்டும், காட்டாமணக்கு செடி கொடிகள் வளர்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் விரைந்து வடிவதற்கு தடை ஏற்படுகிறது. இந்நிகழ்வால் விவசாயிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து இவற்றை தவிர்க்கும் பொருட்டு, செங்கலநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் இயந்திரம் மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ சொர்ணராஜ், உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆயிங்குடி கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Chengalaneer ,Ayingudi village ,Pudukottai ,Aingudi village ,Aranthangi circle ,Pudukottai district ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...