×

நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்

*தண்ணீர் சரிவர கிடைக்காத பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடு

*புதுகை கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை : நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் சரிவர கிடைக்காத பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தி உள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மற்றும் கோடைகால மழை குறித்தும், அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

அப்போது கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்ததாவது:தமிழக அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்வசதி மற்றும் சுகாதார வசதி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இன்றையதினம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மற்றும் கோடைகால மழை குறித்தும், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். மேலும் குடிநீர் சரிவர கிடைக்காத பகுதிகளில் மாற்று ஏற்பாடுகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்ட நடவடிக்கைகளின்படி, உள்ளாட்சிப் பகுதிகளில் வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிடுவதற்கு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து, கோடைகால மழை குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில், கோடை மழையினால் பாதிக்கப்பட்ட சாலையினை சரிசெய்திடவும், மேலும் மழையினால் சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பணிகள் அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு இவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன், செயற்பொறியாளர் (த.கு.வ.வா.) அய்யாசாமி, நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை, அறந்தாங்கி (பொ)) ஷியாமளா, பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் பள்ளி பூட்டை உடைத்து பொருட்கள் சூறை