×

ஷோரூமில் 21 எலக்ட்ரிக் பைக் எரிந்து நாசம் தீ தடுப்பு சாதனங்கள் இல்லாததே காரணம்: தீயணைப்பு துறை விளக்கம்

மாதவரம், மே 4: பாரிமுனை வாலாஜா ரோடு கன்னியப்ப முதலி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (57), பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் எலக்ட்ரிக்கல் பைக் ஷோரூம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஷோரூமில் இருந்த எலக்ட்ரிக் பைக்குக்கு சார்ஜ் போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று பைக்கின் பேட்டரியில் இருந்து கரும்புகை வெளியாகி உடனடியாக எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
தீ அதிகரிக்க தொடங்கியதும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற எலக்ட்ரிக் பைக்குகளிலும் பரவி தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. சுமார் 2 மணி நேரம் போராடி நீண்ட இழுபறிக்குப் பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் ஷோரூமில் இருந்த புது எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் சர்வீசுக்கு வந்த எலக்ட்ரிக் பைக் என மொத்தம் 21 பைக்குகள் தீயில் கருகி நாசமாகின.

இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த இடத்தை நேற்று முன்தினம் இரவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டார்.
வடசென்னை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் லோகநாதன் கூறுகையில், ‘‘தீ விபத்து நடந்த ஷோரூமுக்குள் நுழைவதற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது. கரும்புகை தொடர்ந்து வெளியேறி வந்ததால் வீரர்கள் அந்த நுழைவாயில் வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டனர். புகையை வெளியேற்றும் கருவிகளைக் கொண்டு வீரர்கள் புகையை வெளியேற்ற தொடங்கினர்.

குறிப்பிட்ட அந்த ஷோரூமில் வென்டிலேட்டர் வசதி இல்லை. கரும்புகை வெளியேறிய போது அங்கு இருந்தவர்கள் ஈரக் கோணியை பைக் மீது போர்த்தியிருந்தால் ஓரளவிற்கு விபத்தை தடுத்திருக்கலாம். தீ தடுப்பு சாதனங்களும் ஷோரூமில் இல்லாததால் இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பைக்குகளை பொறுத்தவரை சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுவது தவறு. 100 சதவீதம் சார்ஜ் ஆன பின்பும் சார்ஜரை அன்பிளக் செய்யாமல் விட்டு விடுகின்றனர். இதனால் அதிகளவில் பேட்டரி வாகனங்கள் சூடாகி தீ பற்றி எரியும் சம்பவங்கள் தற்போது நடந்து வருகிறது. எனவே எலக்ட்ரிக் பைக்குகளை பொறுத்தவரை அதில் உள்ள பேட்டரிகளை கையாளும்போது மக்கள் முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வணிக பயன்பாடு உள்ள அனைத்து இடங்களிலும் தீத்தடுப்பு சாதனங்களை முறையாக வணிக நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் உரிய முறையில் பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

The post ஷோரூமில் 21 எலக்ட்ரிக் பைக் எரிந்து நாசம் தீ தடுப்பு சாதனங்கள் இல்லாததே காரணம்: தீயணைப்பு துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Prakash ,Parimuna Walaja Road Kanniyappa Mudali Street ,Peravallur Paper Mills… ,Dinakaran ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்