×

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு சிகிச்சையில் இருந்த கணவனை பார்க்க வந்த செவிலியருக்கு கத்திக்குத்து

 

விக்கிரவாண்டி, மே 4: விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் குத்திய கணவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சரத்குமார்(27), இவர் செவிலியர் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த மாணவி பரணி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் யஷ்வந்தினி என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பரணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதுதொடர்பாக விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பரணியின் நகைகளை சரத்குமார் எடுத்து விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவனை பிரிந்து கடந்த 6 மாதமாக பரணி விழுப்புரம் பொன்அண்ணாமலை நகரில் உள்ள தந்தை தேசிங்கு வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 4 நாட்களுக்கு முன் மாமனார் வீட்டுக்கு சரத்குமார் வந்துள்ளார். அப்போது பரணிக்கும், சரத்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனம் உடைந்த சரத்குமார் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து மயங்கிவிழுந்தார். தொடர்ந்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் தன் மனைவியை கடைசியாக பார்க்க வேண்டுமென சரத்குமார் கேட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து நேற்று பரணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு வந்த பரணி, தனது கணவன் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று அவரை பார்த்துள்ளார். அப்போது சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரணியை கை, தலை பகுதியில் தாறுமாறாக குத்தி கிழித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சரத்குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த செவிலியர் பரணிக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு சிகிச்சையில் இருந்த கணவனை பார்க்க வந்த செவிலியருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Mundiambakkam Government Hospital ,Vikravandi ,Mundiambakkam Government Medical College Hospital ,Villupuram ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி...