×

கூத்தாண்டவர் கோயில் விழா அரவாண் களப்பலியில் தாலியை அறுத்து திருநங்கைகள் ஒப்பாரி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் திருநங்கைகள் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டனர். நேற்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. தொட்டி, சிவிலியங்குளம், வேலூர், நத்தம், பந்தலடி உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து கை, கால், புஜம், அரசிலை, வின்குடை, மாலைகள் கொண்டுவரப்பட்டு தேர் உருவாக்கப்பட்டு மேளதாளம் முழங்க தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேர், முக்கிய வீதிகள் வழியாக செல்லும் போது தங்கள் வேண்டுதல் நிறைவேற விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த கம்பு, மணிலா, முருங்கை, மாங்காய், எலுமிச்சை உள்ளிட்டவைகளை சூறைவிட்டு வழிபட்டனர். தேர் பந்தலடிக்கு சென்ற போது அங்கு அரவாண் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திரண்ட திருநங்கைகள் நேற்று முன்தினம் இரவு கட்டிய தாலியை அறுத்தும், பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்தும் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று தலை முழுகி வெள்ளை புடவை உடுத்தி சோகத்துடன் தங்களது வீடுகளுக்கு சென்றனர். இன்று 4ம் தேதி விடையாத்தியும், 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post கூத்தாண்டவர் கோயில் விழா அரவாண் களப்பலியில் தாலியை அறுத்து திருநங்கைகள் ஒப்பாரி appeared first on Dinakaran.

Tags : Koothandavar Temple Festival ,Aravan ,Kolapali ,Ulundurbate ,Koovagam Koothandavar Temple ,Ulundurbate, Kallakkurichi district ,Koovagam ,Kutthandavar Temple ,Thali ,Transgender Appari ,Aravan Khalapali ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில்...