×

பல்வேறு தரப்பு கண்டனம் எதிரொலி: மல்யுத்த வீரர்களுடன் பி.டி. உஷா சந்திப்பு

புதுடெல்லி: பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை சந்தித்து பி.டி. உஷா தனது ஆதரவை தெரிவித்தார்.நாட்டின் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாஜ எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போராட்டம் நடத்தி வரும் இவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் முன்னாள் தடகள வீராங்கனையுமான பி.டி. உஷா, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை சந்தித்து பி.டி. உஷா தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து புறப்பட்டு சென்றார்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “அவரது கருத்து திரித்து கூறப்பட்டதாக வருத்தம் தெரிவித்த பி.டி. உஷா, தனது ஆதரவை தெரிவித்தார். முதலில் தான் தடகள வீராங்கனை அதன் பிறகே ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்று அவர் கூறினார்” என தெரிவித்தார்.

The post பல்வேறு தரப்பு கண்டனம் எதிரொலி: மல்யுத்த வீரர்களுடன் பி.டி. உஷா சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : TD ,Usha ,New Delhi ,BP ,TD Usha ,
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...