×

புவிசார் குறியீடு பெற இருக்கும் கருப்பு கவுனி, மதுரை செங்கரும்பு

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் சிவகங்கை கருப்பு கவுனி அரிசி மற்றும் மதுரை செங்கரும்பு க்கு புவிசார் குறியீடு பெற ரூ 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கவுனி அரிசியானது செட்டிநாட்டு பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி பெருமை கொள்கிறது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் செந்தூர்குமரனிடம் பேசினோம்.. ‘‘கருப்பு அரிசி என கூறப்படும் கருப்பு கவுனி அரிசி கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டதாக கூறப்படுகிறது. மக்களின் அன்றாட புழக்கத்தில் இந்த வகை அரிசி அறியப்படவில்லை. பண்டையகாலத்தில் இதனை ‘பார்பிடன் அரிசி’ என்று அழைத்துள்ளனர். இதன் பொருள் தடை செய்யப்பட்ட அரிசி. அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தப்ப தடை செய்யப்பட்டு மன்னர்களுக்கான அரிசி என்று இருந்துள்ளது. சீன மன்னர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தினர் மட்டும் தான் இதனை உணவாக மற்றும் மருந்தாக எடுத்துக்கொள்ள முடியும். தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த கருப்புஅரிசி சீனர்களால் மருந்துப் பொருளாக கிமு 1800 களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஜப்பானில் இந்தவகை அரிசி முக்கிய மருந்துப் பொருளாகவும், உணவுப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிங்களில் இந்த அரிசி பண்டைக்காலம் தொட்டு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பாரம்பரிய அரிசி ரகங்கள் பலநூறு ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு இருந்தாலும். இந்த வகை அரிசி வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 19ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய செந்தூர் குமரன், ‘‘பண்டைக்காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டு இருந்த செட்டிநாட்டு நகரத்தார் சமுகத்தினர் இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து வணிகத்தை நடத்திவந்தனர். பர்மாவில் இருந்து வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து வழியாக வரும்போது இந்த கருப்புகவுனியின் மருத்துவக்குணத்தை அறிந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தேவகோட்டை அருகில் அனுமந்தகுடியில்தான் பிரத்யேகமாக சாகுபடி செய்துள்ளனர். இதனை நகரத்தார்கள் பொங்கல், பாயாசம், கிச்சடியாக செய்து தங்களின் திருமணநிகழ்ச்சி உள்பட அனைத்து வீட்டுவிழாக்களிலும் பயன்படுத்தி வந்துள்ளனர். செட்டிநாட்டு பகுதியில் கருப்புக்கவுன்யில் செய்யப்படும் உணவுப் பொருட்கள் இன்றளவும் தவிர்க்கமுடியாத ஓர் உணவுப் பொருளாக உள்ளது. தற்போது இந்த கருப்புக் கவுனி அரிசியை பாராம்பரிய சாகுபடி செய்யும் விவசாயிகள் மாவட்டத்தில் காரைக்குடி, உலகம்பட்டி உள்பட ஆங்காங்கே பயிரிட்டு வருகின்றனர்’’ என்றார்.

இந்த கருப்புக் கவுனியில் புரதம் 3 கிராம். கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) 138 கிராம். நார்ச்சத்து 3 கிராம். சோடியம் 4 மில்லிகிராம் உள்ளது. திசுக்களை ஆரோக்கியப்படுத்தும் ஆண்டிஆக்ஸ்டெண்டுகளை வளப்படுத்துகிறது. வெள்ளை அரிசியில் இல்லாத பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. இந்த அரிசியில் கருப்புஅரிசி, கவுனிஅரிசி, கருப்பு கவுனி அரிசி, செட்டிநாடு கவுனி அரிசி, பருப்பு புட்டரிசி என பல்வேறு ரகங்கள் உள்ளன. இந்த கருப்பு கவுனி அரிசிக்கான புவிசார் குறியீடு மணிப்பூர் மாநிலத்தில் விளையும் சாக் ஹோ அமுபி என்ற ஒற்றைக் கருப்புக்கவுனி அரிசி வகைக்குப் பெறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற தமிழ்நாடுஅரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் கருப்புக்கவுனி அரிசியின் தனித்துவம் உறுதி செய்யப்படும். பராம்பரியம் பாதுகாப்படும். சிவகங்கை மாவட்டத்தில் இதன் பயிர் பரப்பளவு உயர்த்தப்படும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சந்தை மதிப்பு உயரும். விலையும் உயரும். தனித்துவ அடையாளத்தின் மூலம் மாவட்ட விவசாயிகள் நிறைந்த அளவில் பயன்பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகஅளவில் உள்ளது. இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அதனை விவசாயிகளுக்கும் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சிக்கு உரியதாக அமைந்துள்ளது.

இதேபோல் மதுரை செங்கரும்பிற்கும் புவிசார் குறியீடு வழங்க, வேளாண் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து அதற்காக நிதியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது, இது அனைத்து செங்கரும்பு விவசாயிகளையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மேலூர் பகுதியில் பயிரிடப்படும் செங்கரும்புகள் உள்ளூர், பிற மாவட்டங்களைத் தாண்டி பல்வேறு மாநில மக்களின் நாவினையும் இனிப்பாக்கி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க உதவும் ஆலைக் கரும்புகள் ஆண்டுதோறும் பயிர் செய்யப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சீசனில் மட்டும் விற்பனையாகும் செங்கரும்புகள் சூரக்குண்டு, சுக்காம்பட்டி, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், தனியாமங்கலம், வெள்ளலூர், கீழையூர், கீழவளவு, சருகுவலையப்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. பொங்கல் விழாவிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த செங்கரும்புகள் அனுப்பப்படுவது வழக்கம். இதன் சுவை அதிகம் என்பதால் வட மாநிலங்களில் மகாராஷ்டிராவில் மும்பை, குஜராத், டெல்லி, சூரத், லக்னோ மற்றும் தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடாக மாநிலங்களுக்கும் இக் கரும்புகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இக்கரும்புகளை கொள்முதல் செய்வதற்காகவே 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மேலூரில் முகாமிடுவர். இவர்கள் வயலில் உள்ள கரும்பின் தரத்தை வைத்து விவசாயிகளுக்கு முன்தொகை வழங்கி, கரும்பை தங்கள் வசம் வைத்து கொள்வார்கள். தரமான கரும்பிற்கு அதிக கிராக்கி இருக்கும். இதன் பிறகு வெட்டுக் கூலி, சுமக்கும் கூலி, லாரியில் ஏற்றுவது என அவர்களே ஆட்களை வைத்து பணிகளை செய்து கரும்பை எடுத்துச் செல்கின்றனர். 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை லாரியில் பயணம் செய்யும் கரும்பிற்கு தூரத்திற்கு ஏற்ப இங்கிருந்தே வியாபாரிகள் விலையை நிர்ணயம் செய்கின்றனர். மாவட்டத்தின்

மேலூர் பகுதியில் இவ்வகை கரும்புகள் உற்பத்தி குறைவென்றபோதும், கூடுதல் சுவையில் இவை இந்தியாவையே இனிக்கச் செய்துவருகின்றனர். மற்ற ஊர்க்கரும்புகளை விட மேலூர் கரும்புக்கு சுவை அதிகம். இதற்கான காரணத்தை மேலூர் கூத்தப்பன்பட்டி விவசாயி ஆனந்தன் உள்ளிட்டோர் கள் கூறும்போது, ‘‘பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வரும் தண்ணீர், அங்கிருந்து இரு போக சாகுபடி பகுதிகளை கடந்து கடை மடையான மேலூர் பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்கிறது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதற்கு முன்பு பல்வேறு பகுதி மண்ணையும் அரித்துக் கொண்டு ஒரு காலத்தில் மேலூர் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். இது இங்குள்ள வண்டல் மண்ணுடன் சேர்ந்த போது அதில் இருந்து விளையும் கரும்பின் சுவை அலாதியாக இருந்தது. ஆனால் கால்வாயில் சிமென்ட் சிலாப் அமைத்து தற்போது தண்ணீர் வந்தாலும் கூட பழைய மண்ணில் விளையும் கரும்பின் சுவை மாறாமல் இருப்பது மேலூர் பகுதிக்கு கிடைத்த வரப்பிரசாதம்’’ என்கின்றனர்.

The post புவிசார் குறியீடு பெற இருக்கும் கருப்பு கவுனி, மதுரை செங்கரும்பு appeared first on Dinakaran.

Tags : madurai ,Government of Tamil Nadu ,Sivaganga ,Black County Rice ,Madurai Cencurumbu ,Black County ,Madurai Ranker ,
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி!