×

கொட்டித் தீர்த்த கோடை மழை

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. நாளை(4ம் தேதி) கத்திரி வெயில் துவங்கவுள்ள நிலையில், நேற்று முன்தினம் மதியம் முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரவு சுமார் 8 மணியளவில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பாரூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய மழை நீடித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஓசூர் அருகே பாகலூர் சாலையில், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் சாலையில் மழைநீர் தேங்கியது.

இதனால், சாலையோர கடை வியாபாரிகள், நடந்து சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். ஓசூர் தாலுகா அலுவலக சாலை, பழைய நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், பழைய பெங்களூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றதால், பொதுமக்கள் நடந்து செல்ல கூட சிரமம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால், மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரங்கள்(மில்லி மீட்டரில்) வருமாறு: நெடுங்கல்- 70.8, பெணுகோண்டாபுரம்- 67.2, போச்சம்பள்ளி- 64.4, பாரூர்- 60, தேன்கனிக்கோட்டை-52, கிருஷ்ணகிரி- 42, ஓசூர்- 41, சூளகிரி- 30, சின்னாறு டேம்- 28, ராயக்கோட்டை- 27, கேஆர்பி டேம்- 22.8, பாம்பாறு டேம்- 18, ஊத்தங்கரை- 14.2, தளி- 10, கெலவரப்பள்ளி- 10, அஞ்செட்டி- 2 என மாவட்டம் முழுவதும் 559.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 490 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து 490 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு விநாடிக்கு 257 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 43.25 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

The post கொட்டித் தீர்த்த கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Kathri ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...