தர்மபுரி:பாப்பாரப்பட்டி ஏரிக்கரையில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி ஏரிக்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், பாப்பாரப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலாளர் சின்னசாமி, பேருராட்சி 8வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகளிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பாரப்பட்டி ஏரிக்கரையோரம் உள்ள போயர் தெருவில், கடந்த 60 ஆண்டுகளாக 28 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களது வீடுகளுக்கு வீட்டுவரி, மின்கட்டணம், குடிநீர் கட்டணம் ரசீதுகளும், ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன.
இங்கு வசிக்கும் அனைவரும் கூலிவேலை செய்து வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் வசித்து வரும் இடம், நீர்நிலை என பேரூராட்சி நிர்வாகம் கூறி, எங்களது வீடுகளை காலிசெய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாங்கள் குடியிருக்கும் வீட்டில் இருந்து, எங்களை வெளியேற்றினால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வேறு பகுதியில், எங்களுக்கு இலவச மனை வழங்கி, வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
The post மாற்று குடியிருப்பு கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் மனு appeared first on Dinakaran.
