×

மாம்பழம் விற்பனை கடை, குடோன்களில் திடீர் ஆய்வு

 

தர்மபுரி: தர்மபுரி டவுனில் உள்ள மண்டி, பழக்கடைகளில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். பானு சுஜாதா தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். 15க்கும் மேற்பட்ட குடோன்களில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, ஒரு கடையில் சுமார் 50 கிலோ அளவிலான தரமற்ற அழுகிய பழங்கள் மற்றும் செயற்கை ரசாயன பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இரண்டு வாழைப்பழ குடோன்கள் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், விதிமுறை மீறி செயல்பட்ட 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் 2 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வாழைப்பழம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா கூறியதாவது: நுகர்வோர் தாங்கள் வாங்கும் மாம்பழங்கள், இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்பதை கண்டறிய, சில வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையாக பழுத்த பழங்கள், அடிப்பகுதியில் இருந்து பழுக்க ஆரம்பிக்கும்.

இயற்கையான முறையில் பழுத்த மாம்பழம் காம்பு பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. மேலும் அனைத்து பகுதிகளும் ஒருசேர மஞ்சள் நிறத்தில் இருக்காது. சில பகுதிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் என நிறங்கள் வேறுபடும். ஆனால் கல்வைத்து பழுத்த பழங்கள், அனைத்து பகுதியும் பளீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மாம்பழத்தை நுகரும்போது இயற்கையாக பழுத்த மாம்பழங்கள், பழ வாசனை அடிக்கும். மேலும், தண்ணீரில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுத்த பழங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். பழங்கள் உபயோகிக்கும் முன்பாக சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் போட்டு, நன்கு கழுவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post மாம்பழம் விற்பனை கடை, குடோன்களில் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mango sale shop ,Kudones ,Darmapuri ,District ,Food ,Security Standards ,Officer ,Dr. ,Panu ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...