×

கோவில்பட்டியில் தினசரி சந்தை பிரச்னை வியாபாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

கோவில்பட்டி, மே 3: கோவில்பட்டியில் தினசரி சந்தை பிரச்னை தொடர்பாக வியாபாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோவில்பட்டியில் நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் உள்ள 398 கடைகளை இடித்துவிட்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.87 கோடி மதிப்பில் புதிதாக 251 கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை நகராட்சி சார்பில் தற்காலிக சந்தை புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டது. அங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி, தினசரி வியாபாரிகள் சங்கத்தினர், சங்கம் சார்பில் வாங்கப்பட்ட திட்டங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் தற்காலிக சந்தையை தொடங்கி நடத்தி வந்தனர்.

இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதியின்றி தற்காலிக சந்தை தனியார் இடத்தில் நடத்த தடை விதித்தார். இதனால், கடந்த 24ம் தேதி முதல் தற்காலிக சந்தை மூடப்பட்டது. அங்கிருந்த வியாபாரிகள் சங்கத்தினர் எங்களுக்கு தற்காலிக சந்தை அமைக்க அனுமதி தரும்வரை காலவரையற்ற விடுமுறை அறிவிக்கிறோம், என்றனர். மொத்த வியாபாரிகள் கடைகள் திறக்காததால் சந்தையில் காய்கறி விலை உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவியது.

இதனிடையே நேற்று தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் கமலா, பொறியாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், கருப்பசாமி, கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனராஜன் மற்றும் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சின்னமாடசாமி, ஆறுமுகச்சாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வியாபாரிகள் பேசும்போது, நகராட்சி சார்பில் புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக தினசரி சந்தையில் வாகனங்கள் வந்து செல்வதற்கும், கடைகளில் வைக்கப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மேலும் காய்கறி மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு தான் நாங்கள் திட்டங்குளம் பகுதியில் இடம் வாங்கி சந்தை அமைத்தோம், என்றனர். இதில் பதிலளித்த கோட்டாட்சியர், ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி தற்காலிக சந்தை அமைக்க முடியாது. ஆனால், சந்தை அமைக்க உரிய முறையில் விண்ணப்பித்தால் விரைந்து அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்றார்.

The post கோவில்பட்டியில் தினசரி சந்தை பிரச்னை வியாபாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Municipal Pasumbon ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி