×

கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை

 

காஞ்சிபுரம்: மே தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா ஊத்துக்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களையும், வார்டு உறுப்பினர்களையும் பேசக்கூடாது என கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களையும், உறுப்பினர்களையும் பேசக்கூடாது என கூறிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கலெக்டரிடம் புகார் மனு அளிக்கவேண்டி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியர் சீசர், காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் பெசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார், கிராம மக்களை தடுத்து நிறுத்தி சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் 10 பேர் கொண்ட குழுவினர், நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, புகார் மனுவினை மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) பாபுவிடம் வழங்கினர். அதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Oothukkadu ,Walajabad taluka, Kanchipuram district ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...