×

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 50 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்தது: மாநகராட்சி முன்னெச்சரிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மாதவரம்: பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வெங்கடேசன் பக்தன் தெரு சந்திப்பில் 50 ஆண்டு பழமையான கட்டிடம் உள்ளது. உமர் என்பவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தை கடந்த 6 மாதத்திற்கு முன், திருவிக நகர் மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், 76வது வார்டு உதவி பொறியாளர் குமரன், இந்த கட்டிடத்தை காலி செய்யுமாறு அங்கிருந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தினார். அதன்படி அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் 4 மாதத்திற்கு முன்பே காலி செய்து விட்டனர். இந்நிலையில், சென்னையில் திடீர் மழை காரணமாக நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென்று இந்த கட்டிடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி தீயணைப்பு துறையினர், கட்டிடத்தின் தன்மை குறித்து ஆராய்ந்தனர். மேலும் கட்டிடத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, விரைவில் அந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவிக நகர் 6வது மண்டல அதிகாரி முருகன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா உள்ளிட்டோர் அந்த கட்டிடத்தின் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு தடுப்பு வைத்து தடுத்தனர். மேலும் போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உமர் உள்ளிட்ட அண்ணன் தம்பி 5 பேருக்குச் சொந்தமான அந்த கட்டிடத்தை அவர்கள் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால் குறைவான விலைக்கு மட்டுமே அந்த கட்டிடத்தை சிலர் கேட்டு வந்தனர். அதனால் விற்பனையாகாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக அந்த கட்டிடம் பாழடைந்து காணப்பட்டது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. முன்கூட்டியே கட்டிடத்தின் தன்மை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்திய நிலையில், இதுகுறித்து அப்பகுதி உதவி பொறியாளர் அக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும்படி நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து அலட்சிய போக்குடன் செயல்பட்டதால் அவர் இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், பாரிமுனை பகுதியில் பாழடைந்த கட்டிடம் இடித்து விழுந்து அது பெரும் சர்ச்சை ஆனது. அதேபோன்று மேலும் ஒரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் அதற்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

The post பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 50 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்தது: மாநகராட்சி முன்னெச்சரிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Perampur Bareaux Road ,Mathavaram ,Perampur ,Barracks Road, Venkatesan Devotee Street ,Umar ,Bareaux Road ,Dinakaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது