×

பாசிஸ்டுகள் தமிழ்நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சேலம்: தமிழ்நாட்டிற்குள் பாசிஸ்டுகள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று, சேலத்தில் நடந்த தி.வி.க. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ‘இது தமிழ்நாடு, இளம் தலைமுறையின் எச்சரிக்கை’ மாநில மாநாடு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

இதில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி என 2 தலைப்புகளில், கடந்த 6 மாதங்களாக இளைஞர்களுக்கு பயிற்சி பாசறையை முடித்துள்ளோம். கட்சி தலைவரிடம் உத்தரவு வாங்கி, ஒன்றிய அளவில் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்தவுள்ளோம். சேப்பாக்கம் தொகுதியில் இயக்க படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலையை வணங்கி விட்டு தான், எனது அலுவலகத்திற்கு செல்வேன். நான் இந்த நிகழ்ச்சியில் அமைச்சராக வரவில்லை. திராவிட கொள்கையில் பிடிப்பு உள்ளவனாக கலந்து கொண்டுள்ளேன். சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட மாநிலம் தற்போது தமிழ்நாடு என பெயர் பெற்றுள்ளது. நமது பேரன், பேத்திகள் காலத்திலும், இது தமிழ்நாடாகவே இருக்க வேண்டும்.

இன்றைய முதல்வரை பார்த்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆருடம் சொன்னார்கள். அதாவது, ‘அவருக்கு கட்டம் சரியில்லை. ஜாதக அமைப்பு இல்லை. தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் ஆக முடியாது’ என்றார்கள். ஆனால், அவரது கடும் உழைப்பால் வென்று காட்டி, திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களில் ஒன்றிய பாசிச அரசியல் எதிரிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டிற்குள் காலை எடுத்து வைக்க முடியாது. இங்கே பெரியார் என்ற கண்ணுக்கு தெரியாத தடுப்புசுவர் இருக்கிறது. அதில் மோதி மூக்குடைந்து போகிறார்கள். பெரியார் என்ன சாதித்து விட்டார் என கேட்கிறார்கள். அவர் தன்மான உணர்வை ஊட்டினார். ஆனால், இதே சேலத்தை சேர்ந்தவர் பதவிக்காக, முதுகெலும்பு இருப்பதை கூட மறந்துவிட்டு டேபிள், சேருக்கு அடியில் சென்றார். சுயநலத்திற்காக டெல்லியில் உரிமையை அடகு வைத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கு துரோகம் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு கொடுத்த உரையை படிக்காமல், ஆளுனர் அவர் இஷ்டத்துக்கு படித்தார். தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்தார். இதனை கவனித்த முதல்வர், தமிழக அரசு கொடுத்த உரைதான் சட்டமன்றத்தில் ஏறும். அவர் சொன்னவை குறிப்பில் ஏறாது என்றார். இதை கோபம் என்பதை விட, சுயமரியாதை உணர்வு என்பதே பொருத்தமாகும். முதல்வரின் உருவத்தில் அண்ணா ஆட்சி செய்கிறார். திராவிட இயக்க மாநாட்டில் நிறைவேற்றப்படும் பல தீர்மானங்கள், திமுக ஆட்சிக்கு வரும் போது சட்டமாக நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்கு சொத்தில் உரிமையுண்டு என, இந்திய ஒன்றியத்திலேயே கலைஞர் ஆட்சியில் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது.

திராவிட கழகத்தினர் ஒன்றாக இணைந்து, திராவிட மாடல் ஆட்சிக்கு துணையாக இருக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் தலைவராக முதல்வர் இருக்கிறார். இங்கு பாசிச அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினோம். பாசிஸ்டுகளையும் வீட்டுக்கு அனுப்புவோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அரியலூரைச் சேர்ந்த எழிலரசன், திண்டுக்கல்லை சேர்ந்த காயத்ரி ஆகியோர், ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

The post பாசிஸ்டுகள் தமிழ்நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Fasciasts ,Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Salem ,Fascisti ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...