×

திருவண்ணாமலையில் 3 நாட்களாக நடைபெற்ற தேசிய இளையோர் தடகளத்தில் அசத்தல்: சிறந்த வீரர்கள் ஆசிய போட்டிக்கு தேர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட தடகளச்சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி இணைந்து, 21வது தேசிய இளையோர் தடகளப் போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 3 நாட்களாக நடத்தியது. இப்போட்டியை, கடந்த 28ம் தேதி திரைப்பட நடிகர் ஜீவா தொடங்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து, 100 மீட்டர், 200 மீட்டர், 600 மீட்டர், 1,500 மீட்டர், 5,000 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடந்தது. அதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 28 மாநிலங்களைச் சேர்ந்த 16 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கோடை காலம் என்பதால், வெயிலின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரையும் பகல் இரவு போட்டிகளாக நடத்தப்பட்டன. மேலும், வீரர்களுக்கு தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவை மாவட்ட தடகளச்சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில், 21வது தேசிய தடகளப் போட்டியின் நிறைவு விழா நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். மாநில தடகளச்சங்க செயலாளர் சி.லதா முன்னிலை வகித்தார். விழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசுகளை, திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் வழங்கினார். விழாவில், மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரியா விஜயரங்கன், துரைவெங்கட், கென்னடி, மெய்யூர் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், 21வது தேசிய இளையோர் தடகளப் போட்டியில் சிறந்த வீரர்களாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் சவுத்ரி, சுஷ்மிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், சித்தார்த்த் சவுத்ரி, குண்டு எறிதல் போட்டியில் 19.11 மீட்டர் என்ற இலக்கை எட்டி, 1068 புள்ளிகளை பெற்றார்.அதேபோல், இளம் வீரர் சுஷ்மிதா, நீளம் தாண்டுதல் போட்டியில் 6.21 மீட்டர் என்ற இலக்கை எட்டி, 1,044 புள்ளிகளை பெற்றார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தேவ்மீனா, புஷ்ரா கான், அனுஷ்கா, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஷாருக்கான் ஆகியோர் புதிய சாதனை படைத்துள்ளனர்.கடந்த 3 நாட்கள் நடந்த ஒவ்வொரு போட்டிகளிலும் சிறந்த இடங்களை பெற்று, கடந்த போட்டிகளின் சாதனைகளை முறியடித்த வீரர்கள், வரும் ஜூன் மாதம் கொரியாவில் நடைபெற உள்ள தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post திருவண்ணாமலையில் 3 நாட்களாக நடைபெற்ற தேசிய இளையோர் தடகளத்தில் அசத்தல்: சிறந்த வீரர்கள் ஆசிய போட்டிக்கு தேர்வு appeared first on Dinakaran.

Tags : National Year ,Thiruvandamalayan ,Tiruvandamalai ,Tiruvandamalai District Advertising ,Arunai Medical College ,21st National Years' Addendum ,Thiruvandamalai ,National Juns Amatological ,Asian ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி...