×

விருது விழா நிகழ்ச்சியை திடீரென புறக்கணித்த புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புல்லட்சாமி சமீப காலமாக போகும் இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம், பிரச்னையில் முடிகிறதாமே அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு கலைமாமணி விருது ஆண்டு தோறும் வழங்கப்படுவதோடு, ரூ.50 ஆயிரம் பணமுடிப்பும் கொடுக்கிறாங்க. கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம். புல்லட்சாமி பொறுப்பேற்றதும், விருதுகளை வழங்கி எல்லோர் கவனத்தையும் நாம ஈர்க்க வேண்டும். விழா பற்றி தான் மக்கள் பேச வேண்டும் என்று அதிகாரிகள், கட்சிக்காரர்களிடம் சொன்னாராம். மேலும், எப்போதும் இல்லாத வகையில் மொத்தமாக 216 பேருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவர்புல் பெண்மணி, புல்லட்சாமியிடம் எனக்கு அவசர வேலை இருக்கு, தெலங்கானாவுக்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டு முதலில் வந்த 4 பேருக்கு விருதை வழங்கினாராம். பின்னர் புதுச்சேரியில் இருந்தும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை விட்டும் பறந்துட்டாராம். இதை தன்னை அசிங்கப்படுத்தியதாக கருதினாராம் புல்லட்சாமி.

இது தெரியாமல், புல்லட்சாமி கையில் விருது வாங்க வேண்டுமென பலரும் ஆர்வமுடன் மேடையை நோக்கி வந்தாங்களாம். அப்போது கண்ணாடி பிரேம் செய்யப்பட்ட விருது சான்றிதழ் ஒன்றை, தவறுதலாக ஒருவர் கீழே போட்டார். அதுல, விருது சான்று உள்ள கண்ணாடி சுக்குநூறாக விழுந்து உடைந்துவிட்டது. எப்போதும் சென்டிமென்ட் பார்க்கும் புல்லட்சாமி, கண்ணாடி விழுந்து நொறுங்கியதால், உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பும் மனநிலையில் இருந்தாராம். 6 பேருக்கு மட்டும் விருதை வழங்கினாராம். அபசகுனமாக கருதி, நிகழ்ச்சி நடத்தியவர்களிடம், எனக்கு அவசர வேலை இருக்கிறது கூறி நிகழ்ச்சி அரங்கில் இருந்து வெளியேறினாராம். முதல்வரிடமிருந்து விருது பெறலாம் என நினைத்தவர்கள் ஏமாந்து போனார்களாம். 10 ஆண்டுகள் கழித்து விருது பெறுகிறோம், அதனை கூட கொடுக்க புல்லட்சாமிக்கு நேரம் இல்லையா… வீட்டுக்கு போய் அப்படி என்ன செய்யப்போகிறார்…’’ விருது பெற வந்தவர்கள் மனக்குமுறலுடன் போனாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ மாங்கனி மாவட்ட பல்கலையில நடந்த மோசடி, இப்போது விஸ்வரூபம் எடுத்து இருக்காமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடைசி 10 வருச இலைக்கட்சி ஆட்சியில, ஊழல், முறைகேட்டின் ஒட்டுமொத்த புகலிடமா மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டி இருந்துச்சு. கோடிக்கணக்குல நடந்த இந்த முறைகேட்ட விசாரிக்க, கடைசியா தைரியமான, அதே சமயம் ஸ்ட்ரிக்டான 2 ஆபீசர்கள, உயர்கல்வித்துறை நியமிச்சு இருக்காம். ஏற்கனவே, இதுமாதிரி போட்ட குழு விசாரணையால எதுவுமே நடக்கல என்று சந்தோசத்துல இருந்த யுனிவர்சிட்டி ஊழல் பேர்வழிங்க, இப்பவும் விசாரணை புஸ்வாணமா போகும்னு எதிர்பார்த்தாங்க. ஆனா, நேரடியா வந்து ஆவணத்தை எல்லாம் அள்ளிட்டு போன புது விசாரணை குழு. அடுத்தடுத்து நேரடி விசிட் அடிச்சு விசாரணைய தீவிரப்படுத்திட்டாங்க. குறிப்பா புகார்தாரர்கள் கிட்ட இருக்குற ஆவணங்கள வாங்கிக்கிட்ட குழு, ஓரிரு வாரங்கள்ல விசாரணைய முடிச்சு அறிக்கைய தாக்கல் செய்ய போறாங்களாம். இந்த விஷயத்தை கேட்டு ஆடிப்போயிருக்கும், முக்கிய பொறுப்புல இருக்குற ஆபீசருங்க திகைத்து நிற்கிறார்களாம். அதுமட்டுமில்லாம எப்படியாவது எங்கள காப்பாத்துங்கன்னு, மலராத கட்சிய சேர்ந்தவங்க கிட்ட சிபாரிசுக்கு போயிருக்காங்க. ஆனாலும், நம்ம மேல ஆக்‌ஷன் எப்படியும் உறுதின்னு தெரிஞ்ச ஆபீசருங்க, விசாரணை குழுவ நெனச்சு பீதியில இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சாலை பணிகளை சாதகமாக்கி சில கும்பல் மண் கடத்தறாங்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஒன்றிய அரசின் சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் நடந்து வருது. இதுல குயின்பேட்டை மாவட்டத்துல அரக்கோணம், நெமிலி மற்றும் சோளிங்கர் ஆகிய தாலுகா பகுதிகள் வழியாக நடைபெறும் எக்ஸ்பிரஸ் சாலை பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஏரிகளில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி லாரியாக மண் அள்றாங்களாம். இதுதவிர திருத்தணி- அரக்கோணம் புறவழிச்சாலை பணிகளுக்கும் ஏரிகளில் இருந்து மண் எடுக்கிறாங்களாம். இதை சாதகமாக்கி கொண்ட சில கும்பல், சாலை பணிகளுக்கும், அரசின் திட்ட பணிகளுக்கும் மண் அள்ளுவதாக கூறி, லாரிகளில் மண்ணை கடத்தி தனிநபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்றுவருகிறார்களாம். இதனால அரசுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதோட, நீராதரங்கள் எதிர்காலத்தில் பாதிக்கும் நிலை உள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசியலில் நடிகர் கமல் திடீர் வேகம் காட்டுகிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, பாஜ, கமல் ஓட்டு எண்ணிக்கையில் கடும் போட்டி இருந்தது. அனல் பறக்கும் பிரசாரங்களை கோவையில் கமல் மேற்கொண்டார். ஆனால், அந்த தேர்தலில் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும், தொடர்ந்து அரசியல் பயணத்தை முடுக்கிவிட்டுள்ள அவர், ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தார். திமுகவுடன் சுமுகமான உறவை வைத்துள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அவருக்கு ராகுலிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கோவையில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய கமல், சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தையும் கோவையில் நடத்தினாராம். சட்டமன்ற தொகுதியில் தவறவிட்டதை, நாடாளுமன்ற தேர்தலில் பிடிக்க கமல் முயன்று வருவதாக தெரிகிறது’’ என்றார் விக்கியானந்தா

The post விருது விழா நிகழ்ச்சியை திடீரென புறக்கணித்த புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullutsamy ,Peter ,Puducherry ,Yananda ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!