×

பாஜவை 40 சதவீத கமிஷன் என குற்றம்சாட்டும் காங்கிரஸ் 85% கமிஷனில் தொடர்புடையது: பிரதமர் மோடி ஆவேசம்

கோலார்: நாட்டின் பழம் பெரும் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் எப்போதும் 85 சதவீத கமிஷன் எடுத்துக்கொண்டு தான் மக்கள் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும். இதை நான் சொல்லவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமரே கூறியிருக்கிறார். ஊழல் வழக்கில் ஜாமீனில் இருப்பவர்கள் இன்று பாஜவை குற்றம்சாட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.கர்நாடக மாநிலத்தில் மே10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பாஜ தலைவர்கள் அம்மாநிலத்தில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக பாஜ அரசை 40 சதவீத கமிஷன் அரசு என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தில் இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று முன் தினம் வந்தார். அவர் ரோட்ஷோ மற்றும் 3 பொதுகூட்டங்களில் பேசிய பிறகு பெங்களூரு ராஜ்பவனில் இரவு தங்கினார்.

இதையடுத்து நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் கோலார் மாவட்டம் சென்று அங்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ‘நாட்டின் மிகப்பழமையான கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் 85 சதவீத கமிஷனுடன் தொடர்புடையது. காங்கிரசை ஆளும் குடும்பத்தினர் கோடிக்கணக்கான மதிப்பு ஊழலில் தொடர்புடைய வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த குடும்பத்தினர் ஏழை மக்களின் அனைத்து திட்டங்களிலும் 85 சதவீதம் கமிஷன் பெற்றதில் தொடர்புடையவர்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது அக்கட்சியின் மூத்த தலைவரும் அப்போதைய பிரதமராக இருந்தவர் என்ன சொன்னார் தெரியுமா, ‘டெல்லியில் இருந்து அனுப்பப்படும் ஒரு ரூபாயில் 15 காசுகள் மட்டுமே மக்களை சென்றடைகிறது. பாக்கியுள்ள 85 காசுகளை காங்கிரஸ் பறித்துக்கொள்ளும். இது பாஜவின் குற்றச்சாட்டு அல்ல. காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டு.

85 சதவீத கமிஷனை சாப்பிடும் காங்கிரஸ் எப்படி கர்நாடக வளர்ச்சிக்கு பணியாற்றும். ஆனால் பாஜ 100 சதவீத பணத்தையும் அனுப்பி ஏழை பயனாளிகளுக்கு அது சென்றடைந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியாவின் பலத்தால் பல்வேறு திட்டங்களில் ரூ.29 லட்சம் கோடி ஏழைகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதே காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் 85 சதவீதம் கமிஷன் சாப்பிட்டிருப்பார்கள். இதனால் ரூ.24 லட்சம் கோடி ஏழைகளை சென்றடைந்திருக்காது. இந்த பணத்தை காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் லாக்கர்களை நிரப்புவதற்கு பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஊழல் வழக்கை சந்திக்கும் இவர்கள் தான் இன்று கர்நாடக மாநிலத்தில் வந்து மக்களுக்கு போதிக்கிறார்கள்.

2014ம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பு ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 9 ஆண்டு பாஜ ஆட்சியில் நாட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்தவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்பு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாஜ அரசு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்த கடுமையான நடவடிக்கையால் காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் சங்கடத்தை அனுபவிக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் மீது நான் வெறுப்பை காட்டுகிறேன் என்று சித்தரித்து என் மீது வெறுப்பை காட்டுகிறார்கள். மேலும் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார்கள். சில காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டலே விடுக்கிறார்கள். ேமாடி உனது கல்லறை தோண்டப்படும் என்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். ராம்நகர் மாவட்டம் சென்னபட்டனாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிராக போட்டியிடும் பாஜ வேட்பாளர் சி.பி.யோகேஸ்வரை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது கர்நாடக மாநிலத்தில் அரசியல் ஸ்திரதன்மை இல்லாததற்கு குடும்ப அரசியல் கட்சிகளான காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் தான் காரணம் என்றார்.

The post பாஜவை 40 சதவீத கமிஷன் என குற்றம்சாட்டும் காங்கிரஸ் 85% கமிஷனில் தொடர்புடையது: பிரதமர் மோடி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Baja ,PM Modi ,KOLAR ,
× RELATED சொல்லிட்டாங்க…