×

பஞ்சாப்பில் பயங்கரம் விஷ வாயு தாக்கி 11 பேர் பரிதாப பலி: 4 பேருக்கு தீவிர சிகிச்சை

லூதியானா: பஞ்சாப்பில் விஷ வாயு தாக்கி 11 பேர் பலியாயினர். மேலும் 11 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். அங்கு ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று காலை, அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்க வந்த சிலர் திடீரென மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் அந்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். அடுத்தடுத்து மொத்தம் 15 பேர் சுருண்டு விழுந்ததை கண்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடையின் அருகே ஏற்பட்ட விஷவாயு கசிவே அவர்கள் மயங்கியதற்கு காரணம் என்பது தெரிந்தது.

இதையடுத்து, உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு வந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர், கவச உடைகள் அணிந்து சென்று மயங்கி கிடந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். அதற்குள் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மற்ற 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலியானவர்களில் 6 பேர் ஆண்கள்,5 பேர் பெண்கள் என போலீசார் தெரிவித்தனர். மளிகைக்கடைக்காரர் உட்பட அவரது குடும்பத்தினர் 2 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதேபோல் உள்ளூர் பகுதி மக்கள் அங்கே நுழைய கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை ஒன்றில் இருந்து ஹைட்ரஜன் சல்பைடு விஷவாயு கசிந்திருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சாக்கடையில் கழிவு ரசாயனங்கள் கொட்டப்பட்டதால் உருவான விஷவாயுதான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில்,‘‘ 11 பேர் பலியானது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’’ என்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்குவதற்கு பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

The post பஞ்சாப்பில் பயங்கரம் விஷ வாயு தாக்கி 11 பேர் பரிதாப பலி: 4 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Punjab ,Ludhiana ,
× RELATED பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!