×

4 லட்சம் இடங்களில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி 100வது முறையாக பிரதமர் மோடி உரை: உலகம் முழுவதும் 63 மொழிகளில் ஒளிபரப்பு

புதுடெல்லி: அகில இந்திய வானொலியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் 100வது முறையாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் நேற்று உரையாடினார். இந்த 100வது நிகழ்ச்சி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் நேரலையில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் 100வது பகுதி நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் பிரமாண்ட திரை மற்றும் வானொலி மூலமாக பிரதமரின் பேச்சை பொதுமக்கள் கேட்க பாஜ கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், மாநில ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பாஜ ஆளும் மாநில முதல்வர்கள், பாஜ மூத்த தலைவர்கள் பலர் மக்களோடு மக்களாக அமர்ந்து பிரதமரின் பேச்சை கேட்டனர். மேலும், இந்தியில் உரையாற்றும் பிரதமர் மோடியின் பேச்சு, அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள 23 மொழிகள், 29 வட்டார மொழிகள் மற்றும் சீன மொழி, பிரெஞ்ச், அரபி உள்ளிட்ட 11 அந்நிய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் உட்பட 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

‘மனதின் குரல்’ கோடிக்கணக்கான மக்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு. 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, விஜயதசமி அன்று இந்த யாத்திரையை நாம் தொடக்கினோம். விஜயதசமி, தீமைகளுக்கு எதிரான நல்லவைகளின் வெற்றி திருநாள். அதே போல, மனதின் குரலும் நாட்டுமக்களின் நல்லவைகளை, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை கொண்டாடும் அற்புதமான திருநாள். இந்த நிகழ்ச்சியில், நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் இணைந்தார்கள். இதனால், இந்த நிகழ்ச்சியுடன் இணைக்கப்பட்ட, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம், தூய்மை பாரதம், கதராடை, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா போன்ற அனைத்து திட்டங்களும், மக்கள் இயக்கமாக மாறியது.

என்னுடைய வழிகாட்டி லட்சுமண்ராவ் எப்போதும் ஒரு விஷயத்தைக் கூறுவார். ‘எதிரில் இருப்பவர் உங்களுடைய நண்பராக இருந்தாலும் சரி, உங்களுடைய எதிரியாக இருந்தாலும் சரி, நாம் அவரவருடைய நல்ல இயல்புகளை அறிந்து கொண்டு, அவர்களிடமிருந்து கற்க முயல வேண்டும்’, என்பார். அதுபோல, மனதின் குரல், மற்றவர்களின் குணங்களிடமிருந்து நிறைய பாடங்களை கற்க ஒரு மிகப் பெரிய சாதனமாகி விட்டது. நான் குஜராத்தின் முதல்வராக இருந்த சமயத்தில், சாமானிய மக்களைச் சந்திப்பது, கலந்து பழகுவது வெகு இயல்பான விஷயமாக இருந்தது. ஆனால் 2014ம் ஆண்டு, டெல்லிக்கு வந்த பிறகு, இங்கு வாழ்க்கை மிக வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன்.

பணி வித்தியாசமானது, பொறுப்பு வித்தியாசமானது, பாதுகாப்பு கெடுபிடி இருந்தது. இதனால் ஆரம்ப நாட்களில், வெறுமையாக உணர்ந்தேன். சுமார் 50 ஆண்டுக்கு முன்பாக நான் வீட்டை துறந்து வந்தது, என்னுடைய தேசத்து மக்களுடன் தொடர்பு கொள்வதை கடினமாக்கும் நிலைக்காக அல்ல. என் நாட்டு மக்களே எனக்கு அனைத்தும் ஆவார்கள். அவர்களிடமிருந்து விலகி என்னால் எப்படி இருக்க முடியும்? இந்தச் சவாலுக்கான தீர்வினை அளித்து, கோடிக்கணக்கான சாமானிய மக்களோடு என்னை இணைக்கும் பாதையை காட்டியது தான் மனதின் குரல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியால், நான் உங்களை விட்டு விலகி இருக்கிறேன் என்ற உணர்வே என்னிடம் இல்லை.

என்னைப் பொறுத்த வரை மனதின் குரல், ஒரு நிகழ்ச்சி அல்ல, இது என்னுடைய நம்பிக்கை, வழிபாடு, விரதம். மக்கள் இறைவனை வேண்டி செல்லும் போது, பிரசாதத்துடன் திரும்பி வருகிறார்கள். அதுபோல இறைவனின் வடிவமான மக்களின் பாதங்களில் கிடைத்த பிரசாதம் போன்றது மனதின் குரல். இது, என்னுடைய மனதின் ஆன்மீக பயணமாகி விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும் பல்வேறு சாதனைகள் புரிந்து சாமானிய மக்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

* யுனெஸ்கோ தலைவர் பங்கேற்பு
மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில், ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரே அசோலே பங்கேற்று பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். அப்போது நிகழ்ச்சியில் பேச வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்ட அசாலே, இந்திய மக்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், கல்வி மற்றும் கலாச்சார பாதுகாப்பில் இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் குறித்து அவர் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழியில் கல்வி பயில்வதற்கான விருப்பம், கல்வியில் தொழில்நுட்பத்தை புகுத்துதல் மூலம் கல்வித்துறையை வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வருகிறது. மனதின் குரல் நிகழ்ச்சியிலும், கல்விக்கான தன்னலமற்ற சேவை புரிந்த பலரின் முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

* 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து நாகநதியை மீட்டெடுத்தது பெருமை பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி தனது 100வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையில் உருவாகும் நாகநதி வாழப்பந்தல் என்னும் இடத்தில் கலக்கிறது. இந்த நாகநதி வேலூர் மாவட்ட மக்களின் குடிநீராகவும் பயன்படுகிறது. கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நாகநதி ஓடையில் உருவாகும் தண்ணீர் ஆவியாகி செல்வதை தடுக்கும் வகையில் 354 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. கோடையிலும் நெல், வாழை போன்று தண்ணீர் அதிகம் உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் பேரும், வாழும் கலை அமைப்பை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து தூர்வாரி சீரமைத்து மீட்டெடுத்துள்ளது பெருமைக்குரியது. நாகநதி வற்றாத ஜீவநதியாக உள்ளது’ என குறிப்பிட்டார்.

The post 4 லட்சம் இடங்களில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி 100வது முறையாக பிரதமர் மோடி உரை: உலகம் முழுவதும் 63 மொழிகளில் ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,All India Radio ,PM Modi ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...