×

தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ‘ஜாலி உலா’: சுருளி அருவியில் யானைகள் முகாம்; பொதுமக்கள் நுழைய தடை

கம்பம்: தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் காட்டுயானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுருளி அருவியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் நுழைய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தேனி மாட்டத்தில், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது.

கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இந்த அருவிக்கு தேனி மட்டுமல்லாது, தமிழக மற்றும் கேரளத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனர். சுருளி அருவிக்கு மேகமலை அருகே உள்ள தூவனம், ஈத்தக்காடு பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. வருடத்திற்கு 9 மாதங்களுக்கு மேல் நீர்வரத்து உள்ளதால், சுருளி அருவி ஆண்டு முழுவதும் பிஸியாகவே காணப்படும். இந்த அருவி மேகமலை வன உயிரின கிழக்கு சரக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு குளிக்க செல்வதற்கு நுழைவு கட்டணமாக ரூ.30 வனத்துறையினர் வசூலிக்கின்றனர். சுருளி அருவி சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது முதல் அனைத்து விதமான ஈமக்கிரியையும் இந்த அருவியில் செய்யப்படுவதுண்டு. சுருளி அருவியை தென் காளகஸ்தி என்றும் குறிப்பிடுவர். இந்தநிலையில், சுருளி அருவியில் நேற்று முதல் 7 யானைகள் குட்டியுடன் முகாமிட்டு சுற்றி வருகின்றன. இதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் நுழைய தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் பிச்சைமணி கூறுகையில், சுருளி அருவியில் குட்டிகளுடன் மொத்தம் 7 யானைகள் முகாமிட்டுள்ளன. ஓரிரு நாட்களில் யானைகள் இடம் பெயர்ந்த உடன் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்றார். சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் உள்ள ஹைவேவிஸ் பேராட்சியின் மலைப்பகுதிகளில் யானை கூட்டங்களும், சிறுத்தை மற்றும் வரிப்புலிகள், காட்டு மாடுகள், வரிக்குதிரை கள், அரிய வகை பாம்பு இனங்கள், சிங்கவால் குரங்குகள், கருஞ்சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல உயிரினங்கள் 1.50 ஏக்கர் அளவில் சின்னமனூர் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் வனத்திற்குள் வாழ்கின்றன. தற்போது வெயில் கொளுத்தி வருவதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து நீர்நிலைகளை தேடி வருகின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஹைவேவிஸ், தூவானம், வெண்ணியார், மணலார், இரவங்கலார் ஏரி மற்றும் அணைகளுக்குள் இறங்கி தண்ணீர் குடிக்கின்றன. குறிப்பாக யானைகள் வெண்ணியாறு அணையில் ஒற்றையாகவும், கூட்டமாகவும் அடிக்கடி வந்து தாகம் தீர்த்து செல்கின்றன. எனவே, பொதுமக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

The post தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ‘ஜாலி உலா’: சுருளி அருவியில் யானைகள் முகாம்; பொதுமக்கள் நுழைய தடை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Kerala ,Joli ,Chiruli ,Pampam ,Camp ,Varili ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு