×

பாவாலி ஊராட்சியில் திறந்த நிலையில் உள்ள குடிநீர் கிணறு: பொதுமக்கள் அச்சம்

விருதுநகர், ஏப்.30: விருதுநகர் அருகே உள்ள பாவாலி ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணறு, மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த பொதுமக்கள் அஞ்சுகின்றனர். விருதுநகர் அருகே உள்ள பாவாலி ஊராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் நகர், பராசக்தி நகர், கலைஞர் நகர் பகுதிகளுக்கு வடமலைக்குறிச்சி ரோட்டில் கௌசிகா ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கிணற்றின் மேல் மூடி துருப்பிடித்து பயன்படுத்த முடியாமல் போனது. இந்த சிதைந்த மூடியை அகற்றி பல வருடங்களாகி விட்டது. மேல் மூடியின்றி திறந்து கிடக்கும் குடிநீர் கிணற்றில் பலர் பூ மாலை கழிவுகளை போட்டு செல்கின்றனர். பல நேரங்களில் நாய், பூனை தவறி விழுந்து உயிரிந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இருப்பினும் ஊராட்சி நிர்வாகத்தினர் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். அதே கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்று இப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சமூக விரோதிகள் கிணற்றில் விஷத்தை கலக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அய்யனார் நகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘திறந்த நிலையில் உள்ள கிணற்றில் இருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீரை எப்படி குடிநீராக பயன்படுத்த முடியும்? இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் கிணற்றிற்கு தரமான மூடி போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிணற்றில் இருந்து நீரேற்றும் குழாயில் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. இது குறித்தும் முறையிட்டுள்ளோம். குழாயை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

The post பாவாலி ஊராட்சியில் திறந்த நிலையில் உள்ள குடிநீர் கிணறு: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Bawali Panchayat ,Virudhunagar ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...