×

கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி: விஜய்சங்கர் அரை சதம் விளாசல்

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடந்த ஐபிஎல் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா-குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஜெகதீசன்-ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் 3வது ஓவரில் முகமதுஷமி பந்தில் ஜெகதீசன் 19 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷாகுல்தாக்கூர் டக் அவுட்டானார். பவர் பிளே ஓவரில் 2 விக்கெட்டை இழந்து தவித்த கொல்கத்தா அணியை குர்பாஸ், தனது அதிரடி ஆட்டத்தால் மீட்டெடுத்தார்.

ஒருமுனையில் அடுத்தடுத்து வெங்கடேஷ் ஐயர் 11, கேப்டன் ராணா 4 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய குர்பாஸ் அரைசதம் விளாசினார். 16வது ஓவரில் குர்பாஸ் 81 ரன்னில் நூர்அகமது சுழல்பந்து வீச்சில் ரஷித்கானிடம் கேச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரிங்குசிங் 19 ரன்னில் வெளியேற, கடைசி கட்ட ஓவர்களில் ரஸல் அதிரடியாக ஆடி 31 ரன் குவித்து, ஆட்டத்தின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். வீசா 8 ரன்னில் களத்தில் இருந்தார். கொல்கத்தா 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் குவித்தது. குஜராத் தரப்பில் முகமதுஷமி 3, ஜோசுவா லிட்டில், நூர்அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சாஹா, சுப்மான் கில் துரத்தலை தொடங்கினர். 5வது ஓவரில் ரஸல் பந்தில் சாஹா 10 ரன்னில் அவுட்டாக, கில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி, ரன் குவித்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்னில் நடையை கட்டினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கில், 35 பந்தில் 49 ரன்னில் சுனில்நரேன் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த விஜய்சங்கர்-மில்லர் ஜோடி, குஜராத் அணியை பதம் பார்த்தது.

அதிரடியாக ஆடிய விஜய்சங்கர் அரைசதம் (51 ரன்) விளாசினார். 17.5 ஓவரில் 180 ரன் வெற்றி இலக்கை எட்டி, கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் குஜராத் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மில்லர் 32 ரன்னுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் ராணா, ரஸல், நரேன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஜோசுவா லிட்டில் மேன் ஆப்தி மேட்ச் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

The post கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி: விஜய்சங்கர் அரை சதம் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Kolkata ,Vijay Shankar ,39th league ,IPL ,Eden Gardens ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு...