×

மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் எதிரொலி; பாஜக எம்பி மீது போக்சோ உட்பட 2 எப்ஐஆர் பதிவு: விரைவில் கைதாக வாய்ப்பு..!

* மைனர் வீராங்கனையிடமும் சேட்டை

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக பாஜக எம்பியின் மீது போக்சோ உள்ளிட்ட 2 எப்ஐஆர்கள் நேற்றிரவு பதிவு செய்யப்பட்டன. அதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின், இதுகுறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் அரசின் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் நேற்றுடன் 6வது நாளாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், டெல்லி போலீஸ் தரப்பில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குபதிய முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இரண்டு எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது கன்னாட் பிளேஸ் போலீசார் இரண்டு எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர். அவற்றில் ஒன்று போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு மைனர் பெண்ணும் (மல்யுத்த வீராங்கனை) பாதிக்கப்பட்டிருப்பதால், போக்சோ பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த இரண்டு எப்ஐஆர்களையும் விசாரிக்க 7 பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண் உதவி கமிஷனர் (ஏ.சி.பி) குழு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட இரண்டு எப்ஐஆரில் ஒன்றின் விசாரணை, இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வெளிநாட்டில் தான் விசாரிக்க வேண்டியிருக்கும்.

பாதிக்கப்பட்ட மைனர் வீராங்கனைக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அங்கு தான் நடந்துள்ளது. போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். ஏனெனில் பாதிக்கப்பட்ட மற்றும் புகார்தாரர்களுக்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது’ என்றனர். நேற்று நள்ளிரவு பாஜக எம்பிக்கு எதிராக இரண்டு எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதால், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதனால், அவர்களின் (7வது நாள்) போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வரவாய்ப்புள்ளது. மேலும் விரைவில் பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் எங்கும் ஓடவில்லை
பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றம் எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவால் மகிழ்ச்சி அடைகிறேன். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நான் எங்கேயும் ஓடவில்லை. நான் என்னுடைய வீட்டில் தான் இருக்கிறேன். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். இந்த நாட்டில் நீதித்துறையை காட்டிலும் பெரியவர் யாரும் இல்லை. எனவே நீதித்துறையை காட்டிலும் நானும் பெரியவன் அல்ல. ஒவ்வொரு விதியையும், சட்டத்தையும் நான் முறையாக பின்பற்றினேன். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது. நான் யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. எனக்கு நீதி கிடைக்கும்’ என்றார்.

The post மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் எதிரொலி; பாஜக எம்பி மீது போக்சோ உட்பட 2 எப்ஐஆர் பதிவு: விரைவில் கைதாக வாய்ப்பு..! appeared first on Dinakaran.

Tags : bajaka MP ,Chet Delhi ,BJP ,Dinakaran ,