×

திருப்பத்தூரில் 30 கிலோ பழங்கள் அழிக்கப்பட்டது ரசாயன கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்றால் நடவடிக்கை-உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

திருப்பத்தூர் : ரசாயன கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி நேற்று திருப்பத்தூர் பஸ் நிலையப் பகுதியில் உள்ள மாங்காய் மண்டிகள் மற்றும் கந்திலி அருகே பெரியகரம் பகுதியில் உள்ள மாங்காய் மண்டியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரசாயன கற்கள் மூலம் மாங்காய்களை பழுக்க வைத்த 50 கிலோ மாம்பழங்களை கைப்பற்றி அழித்தனர்.

தொடர்ந்து பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தபோது அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ மாம்பழங்கள் அழிக்கப்பட்டது. இதுதவிர, ஐந்து கடைகளுக்கு தலா ₹2 ஆயிரம் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி கூறியதாவது:தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. மாம்பழ சீசன் தொடங்கி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாம்பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க ரசாயன (கார்பைட்) கற்களை வைத்து பழுக்க வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இயற்கையான முறையில் மாங்காய்களை காய்ந்த வைக்கோல் மீது போட்டு ஒரு வார காலம் வைக்க வேண்டும்.

பழுத்தவுடன் அந்த பழத்தை சாப்பிட்டால் தான் உடலுக்கு ஆரோக்கியம். இதுபோன்ற ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்து வியாபாரிகள் வியாபார நோக்கத்திற்காக விற்பனை செய்கின்றனர்‌. இவற்றை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் உள்ளிட்டவைகள் ஏற்படும். எனவே வியாபாரிகள் இது போன்ற ரசாயன கற்களை வைத்து பழுக்க வைப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

மேலும் உணவு பாதுகாப்பு அரசாணை திட்டத்தின் கீழ் மாம்பழம் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் உணவு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். அப்படி உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழ் பெறாமல் இருந்தால் உடனடியாக வந்து சான்றிதழை பெற்றுக்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பத்தூரில் 30 கிலோ பழங்கள் அழிக்கப்பட்டது ரசாயன கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்றால் நடவடிக்கை-உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirupattur ,Thiruptur ,Food Safety Officer ,
× RELATED பள்ளி முன்பு பான்மசாலா விற்பனை