×

கீழ்வேளூர் ரயில்வே கேட் மூடல் எதிரொலி நெரிசல் மிகுந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதி

 

கீழ்வேளூர், ஏப்.29: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் – கச்சனம் சாலையில் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் உள்ளது. நாகப்பட்டினம் – திருவாரூர் ரயில் பாதையில் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் மாறி செல்லும் வகையில் 3 ரயில் பாதைகள் உள்ளது. இதனால் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் கிராசிங் அடிக்கடி நடைபெறும் போது ஒவ்வொரு முறையும் சுமார் 20 முதல் 30 நிமிடத்திற்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது.

காரைக்கால் துறை முகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டும், நிலக்கரி எற்றவும் ஒரு நாளைக்கு 20 முறை சரக்கு ரயில்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை 7.50 மணிக்கு திருவாரூரில் இருந்து காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்ற சென்ற ரயில் காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி கொண்டு வந்த ரயில், திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் ரயிலுக்காக காத்து நின்றது.

அதேபோல், கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் காரைக்கால் துறைமுகத்திற்கு செல்ல கீழ்வேளூரிலிருந்து புறப்பட்டது. ஒரு ரயில் வந்தால் குறைந்த பட்சம் 7 நிமிடத்திற்கு மேல் ரயில்வே கேட் பூட்டப்படும். சரக்கு ரயில் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் நின்றாலோ அல்லது புறப்பட்டாலோ சுமார் 12 நிமிடமாகும். இந்நிலையில் கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சரக்கு ரயில் வந்து நின்று, மற்றொரு சரக்கு ரயிலும் வந்து நின்றதால் தொடர்ச்சியாக சுமார் 25 நிமிடத்திற்கு மேல் ரயில்வே கேட் மூடப்பட்டது.

பொதுவாக கீழ்வேளூர், கச்சனம் சாலை அதிக அளவில் வாகனங்கள் செல்லும் சாலையில் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் சாலையின் இரண்டு பக்கமும் 300க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனமும், 5 பேருந்துகள், 5க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கீழ்வேளூர் ரயில்வே கேட் மூடப்படுவதை பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பஸ்கள், கனரக வாகனங்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

The post கீழ்வேளூர் ரயில்வே கேட் மூடல் எதிரொலி நெரிசல் மிகுந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Kilivelur ,Nagapattinam District ,Kilivelur railway ,Kachanam road ,Dinakaran ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது