×

தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரிடம் ரூ.14,168 கோடி மோசடி செய்த விவகாரம் துபாயில் தலைமறைவாக உள்ள பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேசுக்கு லுக்அவுட் நோட்டீஸ்

* ஆருத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவ், எல்பின் என 8 நிறுவனங்களை சேர்ந்த 44 பேர் கைது
* வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியுடன் நடவடிக்கை என ஐஜி ஆசியம்மாள் தகவல்

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கியுள்ள நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா உள்ளிட்ட 8 நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்திற்கு மாதம் 10 முதல் 35 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி கவர்ச்சி விளம்பரங்கள் செய்து அதன் மூலம் 3 லட்சத்து ஆயிரத்து 635 பேரிடம் ரூ.14,168 கோடி பெற்று மோசடி ெசய்துள்ளனர்.

இந்த மோசடி நிதி நிறுவனங்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஐஜி ஆசியம்மாள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஆருத்ரா: ஆருத்ரா நிதி நிறுவனம் 1.09 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடியில் அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர் ராஜசேகர், அவரது மனைவியும் இயக்குநருமான உஷா, மேலாண் இயக்குநர்கள், இயக்குநர்கள் முக்கிய ஏஜென்ட்கள் என மொத்தம் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர். இந்த வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடியும், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. . ஆருத்ரா வழக்கில் பலமுறை விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. அவர் வழக்கறிஞர்கள் மூலம் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. எனவே ஆர்.கே.சுரேசுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஹிஜாத் நிதி நிறுவனம்: இந்த நிதி நிறுவனம் 89 ஆயிரம் பேரிடம் ரூ.4,400 கோடி மோசடி செய்துள்ளது. இதன் 19 துணை நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள், மேலாளர்கள் என மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவன இயக்குநர்கள் சவுந்தரராஜன், சுரேஷ், செல்வம், சந்திரசேகர் பிரிசிட்லா, கவுசல்யா நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலாண் இயக்குநர் அலெக்சாண்டர், அவரது மனைவி இயக்குநர் மகாலட்சுமிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இனியா, சுஜாதா காந்தா மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ.3.34 லட்சம் ரொக்கம், ரூ.25 லட்சம் மதிப்பு 448 கிராம் தங்கம், ரூ.75 ஆயிரம் மதிப்பு 1 கிலோ வெள்ளி, 80 லட்சம் மதிப்பு 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் 162 வங்கி கணக்குகளில் உள்ள ரூ.14.47 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் 75.6 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், 90 கோடி மதிப்பு அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அம்ரோ: அம்ரோ நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 மோசடி செய்துள்ளது. இந்த நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபும் உள்பட 5 இடங்களில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.10 ஆயிரம் பணம், 49 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு கார், ஒரு ஸ்கூட்டர், 3 லேப்டாப், 3 செல்போன், 8 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஹத் டிரான்ஸ்போர்ட்: ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து சுமார் 6,500 பேரிடம் ரூ.411 கோடி வரை மோசடி செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின்படி ராஹத் நிறுவனம், உரிமையாளர் கமாலுதீன் (இறந்துவிட்டார்), அவரது மனைவி ரேஹானா பேகம், மகன் அப்துல் ரஹ்மான், சகோதரர் அப்துல்கனி, டிரான்ஸ்போர்ட் மேலாளர் நாராயணசாமி, பணியாளர்கள் முகமது சுபாந்திரியோ, முகமது ரபீக், முகமது சாதிக், வடிவேல் ஆகியோர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சுகேஷ் அகமதுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான 154 வாகனங்களில் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்த 54 வாகனங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதி 57 வாகனங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. உரிமையாளர்களின் 65 ஏக்கர் அசையா சொத்து கண்டறியப்பட்டு இடைமுடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சிவிஆர்எஸ்.சிட்ஸ்: சிவிஆர்எஸ்.சிட்ஸ் நிதி நிறுவனத்தில் 382 பேர் சுமார் ரூ.48 கோடி சீட்டு பணம் கட்டி ஏமாந்துள்ளனர். இவர்களின் புகாரின்படி, சம்சுமைதீன், ரஜியாகனி, ஜீனத்பேகம், நாகூர்கனி, சம்சுநீஷா (எ) நிஷா, ரஹ்மான்கனி, சம்சுலதீப்தின், அசாரூதின், ஜாகீர் உசேன், வீரமணி ஆகியோர் சிவிஆர்எஸ் சிட்ஸ் பெயரில் தீபாவளி, பெங்கல் சீட்டு நடத்தி ரூ.400லிருந்து ரூ.50 ஆயிரம் வரை மாத தவணை முறையில் பணம் பெற்று, தங்கம், வெள்ளி, மளிகை பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் வழங்கி மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கில் சும் சுலதீப்தின், வீரமணி, சம்சுமைதீன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் இருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 8 நிதி நிறுவனங்களில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டார்ககள் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தால் விரைவில் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் கேட்டுக்ெகாள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தார்.

* ஏஆர்டி.ஜூவல்லரி

ஏஆர்டி ஜூவல்லரியின் இயக்குநர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி 427 பேரிடம் ரூ.6.30 கோடி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்து நகைக்கடை, இயக்குநர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ரூ.7.48 லட்சம் ரொக்கம், ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜூவல்லரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.எல்பின் லிமிடெட்: எல்பின் லிமிடெட் நிதி நிறுவனத்தில் 11 ஆயிரம் பேர் முதலீடு செய்த ரூ.962 கோடி மோசடி ெசய்யப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, காரைக்கால் என இந்த நிறுவனங்கள் மீது இதுவரை 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இயக்குநர்கள், ஏஜென்ட்கள் வீடுகளில் நடந்த சோதனையில் 400 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் ரூ.139 கோடி மதிப்புள்ள 257 அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளியான ராஜா (எ) அழகர்சாமி, ரமேஷ்குமார், அனந்த் பத்மநாபன் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளிலும் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* ஐஎப்எஸ்

ஐஎப்எஸ் நிதி நிறுவனம், 84 ஆயிரம் பேரிடம் ரூ.5,900 கோடி மோசடி செய்துள்ளது. இதன் துணை நிறுவனங்கள், 10 இயக்குநர்கள், 5 முக்கிய ஏஜென்ட்கள் என மொத்தம் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஏஜென்ட்களான சரவணகுமார், ஜெகநாதன், குப்புராஜ், ஞானசேகரன், ஹரிஹரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 4 இயக்குநர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஐஎப்எஸ் நிதி நிறுவனம், அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான 32 இடங்களில் நடந்த சோதனையில், ரூ.1.14 கோடி ரொக்கம், ரூ.34 மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 18 கார்கள், 791 வங்கி கணக்குகளில் உள்ள ரொக்கம் மற்றும் முதலீடு மூலம் பெற்ற பங்குகள் என ரூ.121.54 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.38.49 கோடி மதிப்புள்ள 54 அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரிடம் ரூ.14,168 கோடி மோசடி செய்த விவகாரம் துபாயில் தலைமறைவாக உள்ள பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேசுக்கு லுக்அவுட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dubai ,Baja ,executive ,R. K.K. Lukout ,Surese ,Arruthra ,IFS ,Hijao ,Elbin ,R.R. K.K. Lukout ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...