×

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் தரிசுநிலம் சீரமைப்புப்பணி: செங்கல்பட்டு கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் தரிசுநில சீரமைப்புப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் செம்பூண்டி ஊராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து எதற்கும் பயனின்றி இருந்த 31 ஏக்கர் பரப்பளவு கொண்ட தரிசு நிலம் உள்ளது, இந்த நிலத்தை கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து தரிசுநிலத்தை மேம்படுத்த சீமைக்கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

பின்பு விவசாயம் செய்யும் வகையில் கிணறு அமைத்து, மின் இணைப்பு பெற்று, மின் மோட்டார் பொருத்தி, சொட்டுநீர் பாசனம் மூலம் மாமரம், பலாமரம், சப்போட்டா உள்ளிட்ட 2 ஆயிரம் பழக்கன்றுகள் நட்டு அந்தப் பகுதியில் உள்ள 61 விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை நேற்று காலை கலெக்டர் ராகுல் நாத் பார்வையிட்டார். மேலும் அன்னங்கால் ஊராட்சியில் 15 ஏக்கர் பரப்பளவில் 11 விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நில மேம்பாடு பணி நடைபெற்று வருகிறது. இதனையும் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை திட்ட இணை இயக்குனர் அசோக், செம்புண்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் தரிசுநிலம் சீரமைப்புப்பணி: செங்கல்பட்டு கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Achirpakkam Union ,Chengalpattu ,Madhurandakam ,Chengalpattu District Achirupakkam Union ,Chemboondi Panchayat ,Achirupakkam Union ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்