×

விஜயவாடாவில் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச தோன்றுகிறது: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

திருமலை: ‘கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச தோன்றுகிறது’ என்று, விஜயவாடாவில் நடந்த என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நேற்று மாலை நடந்தது. இதில் என்.டி.ராமாராவ் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகள் மற்றும் மாநாடுகளில் ஆற்றிய உரைகள் குறித்து ‘வரலாற்று உரை’ என்ற 2 புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இப்புத்தகங்களை ரஜினிகாந்த் வெளியிட்டார். இதை நடிகரும், என்.டி.ராமாராவின் மகனுமான பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பிறகு ரஜினிகாந்த் பேசியதாவது: இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது. ஆனால், எனது அனுபவம், அரசியல் பேச வேண்டாம் என்று சொல்கிறது. சந்திரபாபு எனக்கு 30 ஆண்டு கால நண்பர். சந்திரபாபு இந்திய அரசியல் மட்டுமின்றி, உலக அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அவரது அரசியல் அனுபவத்துக்கு ஒரு உதாரணம், 1996ம் ஆண்டு தொலைதூர பார்வையுடன், ‘விஷன் 2020’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு புரட்சியை கொண்டு வந்தார். ஐதராபாத்தை ஹைடெக் சிட்டியாக அறிவித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டார். பில்கேட்ஸ் உள்ளிட்டவர்களை ஐதராபாத்துக்கு வரவழைத்து பல நிறுவனங்களை தொடங்கினார். தற்போது ஐதராபாத் ஐடி நகராக, தகவல் தொழில்நுட்ப நகராக விளங்கி வருகிறது.

அவரை ஐதராபாத்தில் சந்தித்தேன். அப்போது ஆந்திராவில், ‘ஞானத்தில் தோன்றிய விஷன் 2040’ என்ற தொலைதூர பார்வையுடன் திட்டம் தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவித்தார். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆந்திரா இந்தியாவில் எங்கேயோ சென்றுவிடும். அது நடக்க வேண்டும். அதற்கு இறைவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் சக்தியை தர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். பாலகிருஷ்ணாவை என்.டி.ராமாராவ் போல் தெலுங்கு மக்கள் பார்க்கிறீர்கள். பாலகிருஷ்ணா மிகவும் கோபக்காரராக இருந்தாலும், அவரது மனம் பால் போன்றது. எப்போதும் சினிமாவிலும், அரசியலிலும் நீண்ட காலம் அவர் இருக்க வேண்டும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

The post விஜயவாடாவில் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச தோன்றுகிறது: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : ND ,Ram Rao centenary gathering ,Vijayawada ,Rajinikanth ,Tirumala ,Rama Rao ,ND Rama Rao centenary gathering ,
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...