×

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்; ஈஸ்வரப்பா, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் அமைப்புகள் வலியுறுத்தல்

பெங்களூரு: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்த ஈஸ்வரப்பா மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜ, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழர்களின் ஆதரவை பெறும் வகையில் ஷிவமொக்கா மாநகரில் தமிழர்களை ஓரிடத்தில் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை உள்பட கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த பாஜ தலைவர்கள் இருந்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன் கன்னட தாய் மொழி பாடல் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேடையில் இருந்தவர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கு கொண்ட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசின் மாநில மொழி பாடலான நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும் என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. உடனே பாடலை நிறுத்தும்படி ஈஸ்வரப்பா தெரிவித்தார். அதன்பின் கர்நாடகா மாநில மொழி பாடல் இசைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்து கொண்டு எந்த சலனமும் இல்லாமல் பாஜ தமிழ்நாடு பிரிவு தலைவரான அண்ணாமலை அமைதி காத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமதிப்பு ஏற்படுத்தி இருப்பது கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட ஈஸ்வரப்பா மற்றும் தமிழ் மொழிக்கு அவமதிப்பு ஏற்பட்டதை கண்டிக்காமல் இருந்த அண்ணாமலை ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஈஸ்வரப்பாவின் செயலுக்கு கர்நாடக மாநில திமுக, நாம் தமிழர் கட்சி, உலக தமிழ் கழகம், தங்கவயல் தமிழ் சங்கம், கர்நாடக தமிழர் கட்சி உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு ஏற்படுத்தி இருக்கும் அவமதிப்பு என்று குற்றம் சாட்டின.

The post தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்; ஈஸ்வரப்பா, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் அமைப்புகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : eeswarappa ,anamalai ,bangaluru ,Karnataka ,Eswarappa ,
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக...