×

அய்யலூர் மார்க்கெட்டில் விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்தது தக்காளி-விவசாயிகள் கவலை

அய்யலூர் : திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, எரியோடு, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் தக்காளி அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள், அய்யலூரில் செயல்பட்டு வரும் தக்காளிக்கான பிரத்யேக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் தக்காளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தக்காளிக்கு நடுத்தரமான விலை கிடைத்து வந்தது. இந்நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் தக்காளியில் கரும்புள்ளி மற்றும் விரிசல் விழுந்து பாதிப்படைந்துள்ளது. இதனால் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் வருகையும் குறைந்து தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அய்யலூர் மார்க்கெட்டில் கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ40 முதல் ரூ.80 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள், தேக்கமடையும் தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘இதே நிலைமை ஏற்பட்டால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும்’ என்றார்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வடமதுரை, எரியோடு, அய்யலூர் மற்றும் சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பிரதானமாக தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். தக்காளிக்கு என ஒரு நிரந்தரமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்படைவது ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது.

தற்போது உள்ள தக்காளி விலை தோட்டத்திலிருந்து மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் ேபாக்குவரத்து செலவிற்கு கூட இந்த விலை கட்டாது. எங்கள் பகுதியில் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் கம்பெனி வரும் பட்சத்தில் மட்டும்தான் தக்காளிக்கு நிரந்தர விலை கிடைக்கும்’ என்றனர்.

The post அய்யலூர் மார்க்கெட்டில் விலை வீழ்ச்சியால் வீதிக்கு வந்தது தக்காளி-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Ayalur market ,Ayalur ,Vadamadurai ,Eriod ,Aiyalur ,Dintukal ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...