×

வேண்டிய வரம் அருளும் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில்..!!

 

சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில், அம்மன் பக்தர்களை பெருமளவில் வெகுவாக ஈர்க்கிறது. பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். சென்னையில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெரியபாளையத்தை சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையிலுள்ள செங்குன்றத்திலிருந்து மிக எளிதில் அடையலாம். மேலும், ஆவடி, திருவள்ளுர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளிலிருந்தும், பெரியபாளையம் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது.

ஆண்டு முழுவதும், அம்மனின் அருள் வேண்டி இக்கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குறிப்பாக, பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். மேலும், கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள்.

பக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.

இத்திருக்கோயில், சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்டப் பிறகு, பவானி அம்மன் மிகவும் ஜொலிப்பதாக பக்தர்கள் பரவசப்படுகின்றனர். நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து, நாம், பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம். கட்டணமில்லாத் தரிசனம் மற்றும் சிறப்புக் கட்டண தரிசனம் நடைமுறையில் உள்ளது. அம்மனை மிகவும் அருகாமையிலிருந்து தரிசிப்பதற்கு ரூ.25 சிறப்புக் கட்டணத் தரிசனம் சிறந்தத் தேர்வாகும்.

மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். அம்மனின் கண்களிரண்டும், ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்துடன் ஜொலிக்கிறது. மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

அம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமருடன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து, பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

அமைவிடம்: சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத் திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.

The post வேண்டிய வரம் அருளும் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில்..!! appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Bhavani Amman Thirukhoo ,Bhavani Amman Thirukoil ,Chennai ,Amman ,Bhavani ,Ammane ,Bhavani Amman ,Thirukkhoo ,
× RELATED திருவாலம் பொழில், ஆத்மநாதேஸ்வரர்