×

மாவட்டத்தில் 2ம் கட்டமாக 58 அரசு பள்ளிகளில் 35,106 மாணவர்களுக்கு காலை உணவு- 9 வட்டாரங்களில் அமல்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், 2 கட்டமாக வரும் ஜூன், ஜூலை மாதங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 58 அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 35,106 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், 2023-2024 கல்வி ஆண்டு முதல் 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் 48 அரசு தொடக்கப்பள்ளிகள், 9 நடுநிலைப்பள்ளிகள், 1 உயர்நிலை பள்ளி என மொத்தம் 58 அரசு பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 111 அரசு பள்ளிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதம் 1ம்தேதி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர், தர்மபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய 5 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக வரும் ஜூலை 15ம்தேதி மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி, கடத்தூர், மற்றும் ஏரியூர் ஆகிய 4 வட்டாரங்களிலும் என மொத்தம் 9 வட்டாரங்களில் 58 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 35,106 மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கென ஊராட்சி, பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும். சமையல் செய்யும் இடம், வகுப்பறை, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, சமையலர் தேர்வு, தானியங்கி வங்கி அமைத்து ரொக்கத்தை பதித்து அரிசி, பருப்பு, சிறுதானிய வகைகள், காய்கறிகள், எண்ணெய் போன்றவைகளை நன்கொடையாக பெறுதல் 13 வகையான அங்கீகரிக்கப்பட்ட உணவு வகை முறையாக தயார் செய்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மகளிர் சுயஉதவிக்குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்யும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும், குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு வரை படித்தவராகவும், சமையல் திறன் கொண்டவராகவும், ஆன்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பவராகவும், அவரது குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு, முதன்மை பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தீபனா விஸ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹி முகம்மது நசீர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமேகலை, உதவி திட்ட அலுவலர்கள் சஞ்சிவ்குமார், வெற்றி செல்வன், செங்குட்டுவேல் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மாவட்டத்தில் 2ம் கட்டமாக 58 அரசு பள்ளிகளில் 35,106 மாணவர்களுக்கு காலை உணவு- 9 வட்டாரங்களில் அமல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Chief Minister ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்