×

திருவையாறு வட்டாரத்தில் தென்னை விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி

 

திருவையாறு: திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே உள்ள ஆவிக்கரை கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தற்போது கடும் கோடையின் காரணமாக தென்னையில் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனை குறித்து விவசாயிகளும் பொதுமக்களும் அளித்த புகார்களின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு தென்னை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவையாறு வட்டாரத்தில் நடத்தப்பட்ட இம்முகாமில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி நோயியல் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தென்னையை அதிகமாக தாக்கும் பூச்சி நோய்களுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை விளக்கமாக எடுத்துக் கூறினார். தற்போது ருகோஸ் வௌ;ளை சுருள் பூச்சி, காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு யீரியோபிட் சிலந்தி ஆகிய பூச்சிகளும், தஞ்சை வாடல் நோய், கேரளா வேர்வாடல் நோய் குருத்து அழுகல் நோய் ஆகிய நோய்களுக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் விளக்கப் பட்டன.

குறிப்பாக ருகோஸ் வெள்ளை சுருள் பூச்சி கட்டுப்பாட்டிற்கு 5 அடிக்கு ஒன்றரை அடி அளவுள்ள மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 இடங்களில் ஆறு அடி உயரத்தில் கட்ட வேண்டும். மாலை நேரத்தில் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் தக்கை பூண்டு, சனப்பு, உளுந்து, சாமந்தி ஆகிய பயிர்களில் ஏதேனும் ஒன்றை தென்னையில் ஊடுபயிராக விதைப்பு செய்ய வேண்டும் போன்ற கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டன. 12 ஆண்டு வயதுக்கு குறைவான தென்னை மரங்களுக்கு வேர் வழியாக ஊடுருவி பாயும் நஞ்சு மருந்துகளை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

The post திருவையாறு வட்டாரத்தில் தென்னை விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvaiyaru ,Aavikarai ,Kandiyur ,Dinakaran ,
× RELATED திருவையாறு சத்குரு தியாகராஜர்...