×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மாயாவை வீழ்த்தி ஆண்ட்ரீவா அமர்க்களம்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் 15 வயது வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 3வது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். முதல் முறையாக டபுள்யூடிஏ போட்டியில் சிறப்பு அனுமதியுடன் களமிறங்கி உள்ள ஆண்ட்ரீவா (194வது ரேங்க்), முதல் சுற்றில் கனடா நட்சத்திரம் லெய்லா பெர்னாண்டசை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில், ஆண்ட்ரீவா தனது 2வது சுற்றில் பிரேசில் வீராங்கனை ஹதாஜ் மாயாவுடன் (26 வயது, 14வது ரேங்க்) நேற்று மோதினார். இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாக போராடியதால் முதல் செட் டைபிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் ஆண்ட்ரீவா 7-6 (8-6) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2வது செட்டில் மாயாவின் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 11 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் ஜெர்மனியின் யூலி நியமியருடன் (23 வயது, 67வது ரேங்க்) மோதிய செக் குடியரசு நட்சத்திரம் பெத்ரா குவித்தோவா (33 வயது, 10வது ரேங்க்) 6-7 (9-11), 1-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். நெதர்லாந்தின் அரங்க்சா ருஸ் உடன் மோதிய கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி (27 வயது, 9வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மாயாவை வீழ்த்தி ஆண்ட்ரீவா அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : Andreeva ,Maya ,Madrid Open ,Madrid ,Spain ,Mirra ,Russia ,
× RELATED அமீரக தமிழ் சங்க பொங்கல் விழா