×

எடப்பாடி- அண்ணாமலை இடையே டெல்லியில் அமித்ஷா பஞ்சாயத்து: மோதல் போக்கை கைவிட கண்டிப்பு; ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை சேர்க்க உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபின் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். அப்போது, எடப்பாடி – அண்ணாமலை இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக பஞ்சாயத்து நடந்ததாக கூறப்படுகிறது. பிரிந்து சென்ற அதிமுக தலைவர்களையும் ஒன்று சேர்க்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என 4 பேர் தலைமையில் அதிமுக தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக அதிமுக தலைமை கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வந்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பல வழிகளில் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் ஓபிஎஸ்சை, அதிமுக கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இந்திய தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தற்போது அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டதும், கட்சியும் அவரது முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமியை டெல்லி மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பேருக்கும் ஒரே மரியாதை அளித்து வந்தனர். இதனால், அதிமுகவில் குழப்பம் நீடித்தது. இந்த குழப்பம் வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் மாலை கோவையில் இருந்து டெல்லி சென்றார்.

அவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பாஜ அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடம் நடைபெற்றது. அமிஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதியம் கோவை வந்தடைந்தார்.

பாஜ மூத்த தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர்கள் சந்தித்தபோது என்ன நடந்தது என்பது குறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் நடைபெற்ற கடந்த 2 தேர்தல்களில் அதிமுக தலைமையில்தான் பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, ஏதோ தமிழகத்தில் பாஜ தான் பெரிய கட்சி என்பதுபோலவும், பாஜவுடன்தான் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதுபோல பேசி வருகிறார்.

இதற்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் பலமுறை பதிலடி கொடுத்தும், அண்ணாமலை தொடர்ந்து தவறான கருத்தை பரப்பி வந்தார். இதனால் தமிழகத்தில் அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.அதேபோன்று, தற்போது அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஆனால் டெல்லியில் இருந்து வரும் பாஜ தலைவர்கள் எடப்பாடிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரே அளவான முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

இது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதுபற்றி எடுத்துச்சொல்ல எடப்பாடி பழனிசாமி பலமுறை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை டெல்லியிலும், சென்னையிலும் சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் டெல்லி பாஜ தலைமை இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு அனுமதி வாங்கும்போது தனியாக சந்திக்க வேண்டும் என்றுதான் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி 9 மணிக்கு தனியாக சந்தித்தார். அப்போது எடப்பாடி தமிழில் பேசியதை இந்தியில் ஒருவர் மொழி பெயர்த்து அமித்ஷாவிடம் கூறினார். அவர் கூறியதை தமிழில் எடப்பாடியிடம் கூறினார். அப்போது, அண்ணாமலை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எடப்பாடி பழனிசாமி வைத்தார். வார் ரூம் என்ற பெயரில் அங்கிருந்து எனக்கு எதிராக ஏராளமான டிவிட்டர் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன்பு கூட திகார் சிறையில் நல்ல அறை வாங்கித் தரவா என்று அமர்பிரசாத் ரெட்டி டிவிட்டர் போட்டிருந்தார் என்று புகார் கூறியிருந்தார். இதற்கான ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் எடுத்துக் கொடுத்தார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அமித்ஷா, இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் அதிமுக மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை ஒன்று சேர்த்து தேர்தலில் நில்லுங்கள் என்று அமித்ஷா, எடப்பாடியிடம் கூறினார். ஆனால் அவரோ, கட்சி முழுமையாக என்னிடம் வந்து விட்டது. அவர்களை சேர்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.
அதன்பின்னர், போட்டோ எடுக்க தயாரானபோது, மற்றொரு அறையில் இருந்து தேசிய தலைவர் நட்டா, அண்ணாமலை ஆகியோர் வந்தனர்.

இதை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி ஷாக் ஆனார். ஏனென்றால் அண்ணாமலை மீது புகார் செய்து, அவரை பதவியில் இருந்து தூக்குவதற்குத்தான் கோரிக்கை வைத்தார். ஆனால் அமித்ஷா வீட்டுக்கு அண்ணாமலை வந்திருப்பதும், தனக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். இனி வரும் காலத்தில் தமிழகத்தில் அதிமுகவும் – தமிழக பாஜவும் சுமூகமான மனப்போக்குடன் நடந்து கொள்ளும் என்று எடப்பாடி மற்றும் அண்ணாமலை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

* அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசிய எடப்பாடி , பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
* பின்னர் போட்டோ எடுப்பதற்காக அடுத்த அறைக்கு சென்றபோது அங்கு அண்ணாமலை உட்கார்ந்திருந்ததை பார்த்து எடப்பாடி கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

The post எடப்பாடி- அண்ணாமலை இடையே டெல்லியில் அமித்ஷா பஞ்சாயத்து: மோதல் போக்கை கைவிட கண்டிப்பு; ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை சேர்க்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Amitsha Panchayat ,Delhi ,Edapadi ,Annamalai ,Sasigala ,DTV ,Chennai ,Edapadi Palanisamy ,Chief Minister ,Union Minister ,Edappadi ,TTV ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...