×

தேனிக்கு பதில் குக்கர் ஆதரவாளர்களை குறிவைத்து தூக்கும் இலை தலைமையின் முடிவு குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அல்வா மாவட்ட எம்எல்ஏவுக்கு ‘ஆப்பு’ வைக்கும் மவுன்டன் பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியில் ஏற்கனவே மலையான தலைவருக்கும், துணைத் தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏக்கும் ஏழாம் பொருத்தம். அல்வா எம்எல்ஏ ஒரு காலத்தில் இலை கட்சியில் கொடி கட்டி பறந்தவர். அந்த கட்சியில் இருந்து விலகி தான் தாமரை கட்சியில் இணைந்தார். அந்த வகையில் மாஜி கட்சி என்ற சாப்ட் கார்னரும் எம்எல்ஏவிடம் உண்டு. கடந்த தேர்தலில் இலை கட்சியின் கூட்டணியால் தான் அவரது வெற்றியும் உறுதியாச்சாம். இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரும் நிலையில் எப்படியும் நமது கட்சிக்கு இலை கட்சியுடன் கூட்டணி இருக்கும் என்று கணக்கு போட்டுள்ளாராம். அதாவது மக்களவை தேர்தலில் எப்படியும் அல்வா ஊரின் தொகுதியில் போட்டியிட்டு மத்தியில் விஐபி அந்தஸ்தை எட்ட வேண்டும் என்பது தான் எம்எல்ஏவின் கனவு.

ஆனால், அதற்கு வேட்டு வைப்பது போல் மலையான தலைவர் பேசி வருகிறாராம். இதனால், கூட்டணி இல்லாமல் போனால், நமது ஒன்றிய அமைச்சர் கனவு பணால் ஆகிவிடுமோன்னு அல்வா எம்எல்ஏ வருத்தத்தில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொந்த மாவட்டமே கைவிட்ட வருத்தத்தில் யார் இருக்கா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திருச்சி மாநாடுக்கு தனது ஹனீபீ மாவட்டத்துல இருந்து கூட பெரிய அளவில் கூட்டம் வராததால தேனிக்காரர் ரொம்ப அப்செட்டாம். மாவட்டத்துல உள்ள 130 ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள், 6 நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 300 கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆட்களை திரட்டி வர வேண்டுமென கரன்சியை வாரி இறைத்தாராம். ஆனால், ஹனிபீ மாவட்ட தேனிக்காரரின் ஆதரவு மாவட்ட செயலாளர் இதுல பெரும் குழப்பத்தை உண்டு பண்ணிட்டாராம்.

காரணம், மாசெவுக்கு பரிசு பெட்டி கட்சிக்காரர் மீது தனி அன்பு உள்ளதாம். இதை பலமுறை வெளிப்படுத்தியும் உள்ளார். மாநாடுக்கு பரிசு பெட்டி கட்சிக்காரர் வருவாரென எதிர்பார்த்துள்ளார். அவர் வருவதாக தகவல் இல்லை என்றதால், அப்செட் ஆகி, ஆட்கள் சேகரிப்பில் கோட்டை விட்டுட்டாங்களாம். இதையறிந்த தேனிக்காரரின் 2 வாரிசுகளும், மாசெவை அழைத்து லெப்ட், ரைட் வாங்கிட்டாங்க. சோகத்துல அழுவுறதுக்கு பதிலா, அணி மாறிவிடலாமா என்று மாசெ யோசிக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனியை குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும்னு கோபத்தில் இருப்பவரை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரர், தேனிக்காரர் இலைகட்சியில் தனி அணியாக செயல்பட்டு வர்றாங்க. இந்த இரண்டு அணியிலுமே மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நிறைய பேர் இருக்காங்க.

தற்போது சேலத்துக்காரரின் கை ஓங்கியிருப்பதால நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தேனிக்காரர், குக்கர், சின்னமம்மி குரூப்பை கூண்டோடு காலி செய்து.. அவர்களை தனது பக்கம் இழுப்பதற்கான வேலையில் சேலத்துக்காரர் தீவிரமாக உள்ளாராம். இதுல, முதல் கட்டமாக குக்கர் ஆதரவாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதற்கான மாஸ்டர் பிளானை போட்டு அந்தந்த மாவட்ட மாஜி அமைச்சர்களுக்கு சேலத்துக்காரர் கொடுத்துள்ளாராம். அத்துடன், வேலையை சீக்கிரம் முடித்து கட்சிக்காரங்களை நாடாளுமன்ற தேர்தலுக்குள் தயார் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாராம். முதல் கட்டமாக மலைக்கோட்டை, நெற்களஞ்சிய மாவட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மாஜி அமைச்சர்கள் ‘வைட்டமின் ப’ கொடுத்து அலேக்காக தூக்கினார்களாம்.

தொடர்ந்து கடலோர, மனுநீதி, மன்னர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்கான திரைமறைவு வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார்களாம். ‘வைட்டமின் ப’ எவ்வளவு வேண்டும் என முக்கிய நிர்வாகிகளிடம் டீலிங் நடந்து வருகிறதாம். இந்த தகவல் குக்கர் தலைமைக்கு சென்றதால் அவர் சேலத்துக்காரர் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சரக்கு, மணல் கொள்ளையில் தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் கல்லா கட்டும் காக்கி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுவையில் உள்துறை அமைச்சரின் முன்னாள் பாதுகாவலராக பணியாற்றியவர் எஸ்ஐ கிங் என பெயர் கொண்டவர். உள்துறை அமைச்சரின் தீவிர விசுவாசியாக காட்டிக் கொள்வார்.

இவர் புதுவையில் எல்லைப்புற காவல் நிலையமான திருபுவனையில் உள்ளார். புதுச்சேரியில் இருந்து மலிவு விலை மற்றும் உயர்தர சரக்குகள் கடத்திக் கொண்டு அருகில் உள்ள தமிழக பகுதியான கெங்கராம்பாளையம் வழியாக விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்று திருபுவனையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான ஏனாதிமங்கலத்தில், தற்போது மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மணல் எடுத்துக் கொண்டு புதுச்சேரிக்கு கொண்டு வர எஸ்ஐக்கு கணிசமான தொகையை கப்பம் கட்டினால் தான் மணல் லாரிகள், உள்ளேயே வர முடியும். சரக்கு, மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருவதால் தினமும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எஸ்ஐ கல்லா கட்டுகிறாராம். இவர் மீது பல புகார்கள் சென்றாலும், உள்துறை நடவடிக்கை எடுப்பது இல்லையாம். சக காவலர்களுக்கு பங்கு கிடைக்காமல் புலம்பி வர்றாங்க.

எஸ்ஐயிடம் கேட்டால் அமைச்சருக்கு பங்கு போவதாக கூறி காவலர்கள் வாயை அடைக்கிறாராம். ஆனால், அமைச்சருக்கு பங்கு எதுவும் கொடுப்பதில்லையாம். இதனை அறிந்த பாஜ ஆதரவு எம்எல்ஏவான பாடி பெயர் கொண்டவர், இது தொடர்பா அமைச்சர் சிவமானவரிடம் புகார் கூறினாராம். நடவடிக்கை எடுப்பதாக கூறி எம்எல்ஏவை அனுப்பி வைத்தாராம். ஆனாலும், தொடர்ந்து சரக்கு, மணல் கொள்ளை நடந்து வருவதால் அரசு அதிகாரிகள், எம்எல்ஏ தரப்பினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில நின்னே ஜெயிக்க முடியாதவருக்கு, தாமரை கட்சியில பதவியா…’’ என்று கேட்பவர்களை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல குடியேற்றம் பகுதியை சேர்ந்த, பெயரில் ஆனந்தத்தை வைத்திருக்கக் கூடியவரு முதல்ல ஒரு அமைப்புல இருந்திருக்காரு.

அந்த மூன்றெழுத்து அமைப்புக்கு எதிராக செயல்பட்டதால அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தே நீக்கிட்டாங்க. அதுக்கு அப்புறமா, கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி எலக்‌ஷன்ல இலைகட்சியில கவுன்சிலரா போட்டியிட்டு தோல்வி அடைந்தாராம். இதுக்கிடையில, குடியேற்றம் தாமரை கட்சியில இரண்டு கோஷ்டிகளாக இருக்குறதை பெயரில் ஆனந்தத்தை கொண்டவர் பயன்படுத்திக்கிட்டு ஏதேதோ செஞ்சி பதவி வாங்கிட்டு வந்துட்டாராம். இதனால இரண்டு கோஷ்டிகளாக இருந்தவர்கள்.. இப்போது ஒன்னா சேர்ந்துட்டு, புதுசா வந்தவருக்கு, அதுவும் இலை கட்சியில தோல்வியடைஞ்சவருக்கு தாமரை கட்சியில பதவியா என்று கூறி மல்லுக்கட்டி வர்றாங்களாம். அதோட ஏற்கனவே இருந்தவரையே திரும்பவும் குடியேற்றம் நகர் பிரசிடெண்டாக நியமிக்க வேண்டும்னு போர்க்கொடி தூக்குறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்கு பதில் குக்கர் ஆதரவாளர்களை குறிவைத்து தூக்கும் இலை தலைமையின் முடிவு குறித்து சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : honey ,wiki Yananda ,Mountain ,Alva District ,MLA ,Peter Uncle ,wiki ,
× RELATED அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மலை...