×

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க வங்கியில் ரூ.44 லட்சத்தை திருடிய காசாளர் கைது: கொள்ளை பணத்தில் உறவினருக்கு மருத்துவ சேவை; பஸ்சில் ஊர் ஊராக சுற்றியபோது சிக்கியது எப்படி?

விழுப்புரம்: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க ரூ.44 லட்சத்தை திருடிய வங்கி காசாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் வளவனூரைச் சேர்ந்த முகேஷ் (38) காசாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ், அதிகாரிகளிடம் உடல்நிலை சரியில்லை என கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அப்போது வங்கியின் கணக்கு விவரத்தை கணினி மூலம் சரிபார்த்தபோது ரூ.43.89 லட்சம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே வங்கி மேலாளர் பிரியதர்ஷினி, காசாளரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. காசாளர் அறையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பணத்தை முகேஷ் ஒரு பையில் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனிடையே முகேஷ் கடத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் பணத்துக்காக முகேஷ் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் போலீசார் விசாரித்ததில் அவரது செல்போன் கடைசியாக சென்னை திருவான்மியூர் பகுதியில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த முகேஷை தனிப்படையினர் கைது செய்தனர்.

அப்போது முகேஷ் அளித்த வாக்குமூலம் வருமாறு: எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம். இதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடினேன். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்த பணத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.20 லட்சத்தை இழந்தேன். எப்படியாவது ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை மீட்டு விடலாம் என்று மேலும் லட்சக்கணக்கில் கடன் வாங்கினேன். ஆனால் பணத்தை இழந்ததுதான் மிச்சம். கடன் பணத்தை எப்படி கொடுக்கப்போகிறேன் என்ற மனஉளைச்சலில் இருந்தபோது, காசாளர் அறையில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தைப் பார்த்து அதை எடுத்து சென்று கடனை கொடுத்துவிட்டு, மீதம் இருக்கின்ற பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று எண்ணினேன்.

அதன்படி அறையில் இருந்த ரூ.44 லட்சத்துடன் வெளியேறி கூட்டேரிப்பட்டிலிருந்து, சென்னை செல்லும் பஸ்சில் ஏறி திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றேன். அங்கு சென்றபோது எனது உறவினர் மருத்துவ உதவிக்காக ரூ.1.50 லட்சத்தை அனுப்பினேன். தொடர்ந்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க கடற்கரையில் மூழ்கி உயிரிழந்தது போல் நாடகமாடலாம் என்று நினைத்தேன். ஆனால் பணத்தை என்ன செய்வது என்று கைவிட்டேன். பெங்களூரு போகலாம் என்றால் அங்கு தேர்தல் நடைபெறுவதால் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது.

கடத்தல் நாடகம் போட்டும் போலீசார் நம்பாததால் மீண்டும் புதுச்சேரிக்கு செல்ல திட்டமிட்டு திருவான்மியூரில் இருந்து பேருந்தில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்லும்போது போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மீதமுள்ள பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து முகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே முகேஷ் வங்கியிலிருந்த ரூ.44 லட்சத்தை பையில் அடுக்கிவைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க வங்கியில் ரூ.44 லட்சத்தை திருடிய காசாளர் கைது: கொள்ளை பணத்தில் உறவினருக்கு மருத்துவ சேவை; பஸ்சில் ஊர் ஊராக சுற்றியபோது சிக்கியது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Cashier ,Villupuram ,Villupuram… ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...