×

கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

நைரோபி: பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி மாலிண்டி என்ற சிறிய கடற்கரை நகரம் அமைந்துள்ளது. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியார் பால் மெக்கன்சி. இவருக்கு சொந்தமான பண்ணையில் சிலர் உடல் மெலிந்த நிலையில் மோசமாக இருப்பதாக கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த பண்ணையில் போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு 4 பேர் பிணமாக கிடந்தனர். 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பாதிரியார் பால் மெக்கன்சி தன்னை பின்பற்றும் மக்களிடம் உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவை காணலாம் என போதித்ததாகவும், அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததும் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பண்ணையில் சோதனையை தீவிரப்படுத்தியபோது, தோண்டதோண்ட பிணங்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி கூறுகையில், ‘800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

இதனிடையே உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், போலீசாரின் தேடுல் வேட்டைக்கு பயந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளதாகவும், அவர்களை போலீசார் மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் சூழலில், அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்று கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது. மாலிண்டி நகரில் 213 பேரை காணவில்லை என கென்யா செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kenya ,Nairobi ,north-eastern part ,Kenya, ,
× RELATED கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி