×

ஊட்டி-மசினகுடி இடையே அபாயகர பாதையில் 3 நாளில் 1000 சுற்றுலா வாகனங்கள் மீண்டும் திருப்பி அனுப்பி வைப்பு: வனத்துறை நடவடிக்கை

ஊட்டி: ஊட்டி – மசினகுடி இடையே அபாயகரமான கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களில் பயணித்த 1000 சுற்றுலா வாகனங்களை சோதனை சாவடியில் மறித்து கூடலூர் வழியாக செல்லுமாறு திருப்பி அனுப்பி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து கூடலூர், அண்டை மாநிலமான கர்நாடகா குண்டல்பேட், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதுதவிர மசினகுடி வழியாக முதுமலை மற்றும் மைசூர் செல்ல கல்லட்டி மலைப்பாதை உள்ளது. கூடலூர் சென்று செல்வதை காட்டிலும், இச்சாலையில் செல்வதால் தூரம் குறைவு என்பதால் பெரும்பாலானோர் கல்லட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அபாயகரமான சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்க தெரிவதில்லை. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது.

கடந்த ஆண்டு 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 3 நாட்களுக்கு பின்னரே தகவல் தெரிய வந்தது. 3 நாட்கள் கழித்து உயிரிழந்த 5 பேர் உடல்களும், இரண்டு பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இதையடுத்து இச்சாலையில் ஊட்டியில் இருந்து மசினகுடி ேநாக்கி வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்படுகிறது. வெளியூர் வாகனங்கள் மசினகுடியில் இருந்து ஊட்டி நோக்கி வர மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படுவது குறைந்தது. இந்நிலையில் ஊட்டியில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் கார்கள் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மசினகுடியில் இருந்து மேல்நோக்கி வர மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு திரும்புபவர்களை தலைக்குந்தா சோதனை சாவடியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கூடலூர் வழியாக திருப்பி அனுப்புகின்றனர்.

சில சுற்றுலா பயணிகள் தலைக்குந்தா வழியாக சென்றால் திருப்பி அனுப்பப்படுவோம் என்பதால், சிலர் தலைக்குந்தா செல்லாமல் புதுமந்து, காந்திநகர் வழியாகவும், அத்திக்கல், ஏக்குணி மற்றும் உல்லத்தி என 4 சாலைகள் வழியாக கல்லட்டி சாலையில் பயணிக்கின்றனர். கல்லட்டி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபடும் வனத்துறையினர் கேரள, கர்நாடக மாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கடந்த சனி, ஞாயிறு விடுமுறையின் போது 3 நாட்களில் மட்டும் இதுபோல, மாற்றுப்பாதை வழியாக கல்லட்டி வந்த 1000 வாகனங்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர். சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இருந்து கீழ்நோக்கி பயணிக்கும் போது கல்லட்டி மலைப்பாதை வழியாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், ‘‘அபாயகரமான கல்லட்டி பாதையில் பயணிக்க தலைக்குந்தா மட்டுமின்றி 4க்கும் மேற்பட்ட வேறு பாதை வழியாக கல்லட்டி சென்று பயணிக்க முடியும். கல்லட்டி சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்’’ என தெரிவித்தார்.

The post ஊட்டி-மசினகுடி இடையே அபாயகர பாதையில் 3 நாளில் 1000 சுற்றுலா வாகனங்கள் மீண்டும் திருப்பி அனுப்பி வைப்பு: வனத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ooty-Masinakudi ,Forest department ,Ooty ,Kallati ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...