×

குறைந்த மின்னழுத்த பிரச்னையை போக்க ₹21 கோடியில் துணை மின்நிலையம்

 

தர்மபுரி, ஏப்.27: தொப்பூர் கணவாய் அருகே, வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு விநியோகம் செய்யும் மின்சாரத்தில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதை போக்க, ₹21 கோடியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தொப்பூர் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியை ஒட்டிய கணவாய் அருகே வெள்ளக்கல், மேல் ஈசல்பட்டி, கீழ் ஈசல்பட்டி, பரிகம், அஜ்ஜிப்பட்டி, ஜருகு, கடத்திக்குட்டை, கொம்பு குட்டை, மேற்கத்தியான்கொட்டாய், மேல்பூரிக்கல், கீழ்பூரிக்கல் உள்பட 50 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு அதியமான்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்து, இந்த 50 கிராமங்களுக்கும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. அதியமான்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்து, 12 கி.மீ தொலைவில் உள்ள இந்த 50 குக்கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்வதால், குறைந்த மின்னழுத்தம் (லோ வோல்டேஜ்) ஏற்படுவதால், கிராமங்களில் உள்ள மின்மோட்டார்கள் சரியாக இயங்காமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு, பொருட்கள் பழுது ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இந்த குறைந்த மின்னழுத்தம் குறித்து, கிராம மக்கள் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரனிடம் மனுவாக அளித்தனர். அவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், குறைந்த மின்னழுத்தத்தால் கிராம மக்கள், விவசாயிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இந்த 50 கிராமங்களை உள்ளடக்கிய தனியாக துணை மின்நிலையம் வெள்ளக்கல் பகுதியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை மின்சார துறைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்றுக்கொண்டு, வெள்ளக்கல் பகுதியில் 110 கிலோ வாட் மின்சாரம் கொண்ட ₹21 கோடியில் தனி துணை மின்நிலையம் அமைக்கப்படும். மேலும், நாகதாசம்பட்டி உள்ளிட்ட 2 இடங்களில் 33 கிலோ வாட் கொண்ட தனித்தனியாக துணை மின்நிலையம் அமைக்கப்படும். விரைவில் வாரியத்திற்கு அனுப்பி, ஒப்பந்த புள்ளி கோரப்படும் என்றார்.
இதையடுத்து, தொப்பூர் வெள்ளக்கல் பகுதியில் ₹21 கோடியில் 110 கிலோ வாட் மின்சார துணை மின்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து அலுவலக ரீதியான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் துணை நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ கூறியதாவது:தொப்பூர் கணவாய் அருகே வெள்ளக்கல் பகுதியில், குறைந்தழுத்த மின்னழுத்தத்தைப் போக்கும் விதத்தில், 110 கிலோவாட் துணை மின் நிலையம் அறிவிக்கப்பட்டு, அந்தப் பணி இன்னும் தொடங்கப்படாமல் இருந்தது. அதற்கான நிலமும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. சட்டமன்ற கூட்டத்தில் மின்வாரிய துறை அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றேன். அமைச்சர் வெள்ளக்கல் பகுதியில் மட்டுமல்ல, 3 புதிய துணை மின் நிலையங்களுக்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. அதில், வெள்ளக்கல் பகுதியில் ₹21 கோடி மதிப்பிலான துணை மின்நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, வாரியத்திடம் ஒப்புதல் பெற இருக்கின்றன. ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, விரைவில் டெண்டர் கோரப்படும். அதன்பின் பணிகள் நடக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதைத்தொடரந்து துணை மின்நிலையம் அமைக்கும் பணிக்கான ஆக்கபூர்வ பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தொப்பூர் வெள்ளக்கல் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து மின்சார விநியோகம் செய்வதால், குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதை சீர் செய்ய அரசு புதியதாக ₹21 கோடியில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்,’ என்றனர்.

The post குறைந்த மின்னழுத்த பிரச்னையை போக்க ₹21 கோடியில் துணை மின்நிலையம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Topur ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு