×

கொடநாட்டில் ஆவணங்கள் கொள்ளை, ஜெ. டிரைவர் பலியான விவகாரம் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை: சிபிசிஐடி வளையத்தில் எடப்பாடி ஜோதிடர்

கோவை: கொடநாடு ரகசிய ஆவணங்கள் கொள்ளை, ஜெயலிலதா டிரைவர் பலியான விவகாரத்தில் சசிகலா மற்றும் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரிடம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி இந்த எஸ்டேட்டுக்குள் புகுந்த கும்பல், காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றது. இதுதொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது உதவியாளர், மர வியாபாரி உள்பட 300 பேரிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தனிப்படை போலீசாரின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களிடம் வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் நீலகிரியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலாவிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ஆதாரங்கள் அடிப்படையில் எஸ்டேட் சொத்து, ஆவணங்கள் குறித்து தகவல் சேகரிக்க அவரிடம் 2ம் கட்டமாக விரைவில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டு உள்ளது. கொடநாடு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் இருந்திருக்கலாம், இந்த விவரங்களை அறிந்த நபர்கள் அவற்றை அபகரிக்க அல்லது அழிக்கும் நோக்கத்தில் செக்யூரிட்டியை கொலை செய்து ஆவணங்களை எடுத்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே இதுபற்றி சசிகலாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக விரைவில் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் சேலம் அருகே நடந்த வாகன விபத்தில் இறந்தார். இந்த சாவில் சந்தேகம் எழுந்தது. சேலம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடர் ஒருவரை கனகராஜ் அடிக்கடி சந்தித்து பேசியதாக தெரிகிறது. ஒரு நாள் தனது மனைவியுடன் சென்று அந்த ஜோதிடரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கனகராஜூக்கு நேரம் சரியில்லை, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. அன்று இரவே விபத்தில் சிக்கி கனகராஜ் உயிரிழந்தார். இந்த தகவல் கனகராஜின் மனைவியிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் ஜோதிடருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையின் மூலமாக இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கொடநாட்டில் ஆவணங்கள் கொள்ளை, ஜெ. டிரைவர் பலியான விவகாரம் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை: சிபிசிஐடி வளையத்தில் எடப்பாடி ஜோதிடர் appeared first on Dinakaran.

Tags : Koda Nadu ,J. Sasikala ,Edappadi ,CBCID ,Coimbatore ,Kodanadu ,Jayalalitha ,Sasikala ,Dinakaran ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...