×

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் சந்திப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றார். அங்கு பாஜ மூத்த தலைவர் அமித்ஷாவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தார். இதனால் எடப்பாடி – ஓ.பன்னீர்செல்வம் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. கட்சி பதவியை கைப்பற்ற, ஒற்றைத் தலைமை அதாவது மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி போர்க்கொடி தூக்கினார்.

கட்சி நிர்வாகிகளின் பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிமுக பொதுக்குழுவை கூட்டி, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ெகாண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சில ஆதரவாளர்களையும் அதிமுக கட்சியில் இருந்து நீக்கினர்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டனர். ஆனாலும், நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.இதன்மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கட்சியும் எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி வருகிற இன்று மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரும் டெல்லி பாஜவின் மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணியை உறுதி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோரையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisamy Amitshah ,Delhi ,Chief Minister of General Assembly ,Chennai ,Edappadi Palanisamy ,Chief Minister ,Baja ,Extraordinary General Assembly ,Dinakaran ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி