×

முத்தியால்பேட்டை ஸ்டேஷனை பால் வியாபாரிகள் திடீர் முற்றுகை போலீசார் மீது குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஏப். 26: புதுச்சேரி சோலைநகரில் மாயமான மாடு மீட்டுத் தரப்படாததை கண்டித்து முத்தியால்பேட்டை ஸ்டேஷனை பால் வியாபாரிகள் முற்றுகையிட்டு போலீசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, சோலை நகர், காட்டாமணிக்குப்பத்தில் வசிப்பவர் பழனி (47). பால் வியாபாரியான இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு பசுமாடு சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. அதை பல இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பழனி, சோலைநகர் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்த காவலர்கள் 2 நாள் தேடிப்பார்த்துவிட்டு மாடு கிடைக்காவிடில் எழுத்துப்பூர்வமாக புகார் தருமாறு கூறியதாக தெரிகிறது.

மீண்டும் போலீஸ் நிலையம் வந்தபோது சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டதால் தாமதத்திற்கான காரணத்தை கேட்டறிந்ததோடு, புகார் எழுதி தருமாறு தெரிவித்தார்களாம். விரக்தியடைந்த பழனி, நடந்த சம்பவத்தை முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டத்தில் வசிக்கும், தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான கிருஷ்ணனிடம் (59) முறையிட்டுள்ளார். முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சங்கத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் பழனி மற்றும் தனியார் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

The post முத்தியால்பேட்டை ஸ்டேஷனை பால் வியாபாரிகள் திடீர் முற்றுகை போலீசார் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Muthialpet station ,Puducherry ,Puducherry Cholainagar ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை